ரணிலை கழற்றி விட்ட மைத்திரி – ராஜபக்சேவை பிரதமராக்க காரணம் என்ன தெரியுமா?


இலங்கையின் பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட பல காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வருகிறது.

இலங்கையில் புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே தேர்வாகி உள்ளார். அவருக்கு எதிராக அதிபர் தேர்தலில் வென்ற சிறிசேனாவே அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்,.

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் இருக்கும் இரண்டு முக்கிய கட்சிகள் இலங்கை சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி. இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்து ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணியை உருவாக்கியது.அங்கு ஐக்கிய மக்கள் கூட்டணிதான் ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி ஆட்சி என்பதால் இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திபால சிறீசேனா அதிபராக இருந்து வருகிறார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்து வந்தார்.

இலங்கை சுதந்திரா கட்சியின் தலைவர் மைத்திபால சிறீசேனா முன்னாள் அதிபர் ராஜபக்சேவை எதிர்த்துதான் வெற்றிபெற்றார். இலங்கை சுதந்திரா கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா என்ற கட்சியை வழிநடத்தி வந்தார் ராஜபக்சே.

இந்த நிலையில்தான் , ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி இன்று திடீரென உடைந்தது. கருத்து வேறுபாடு காரணமாகவும், அதிகாரப்பகிர்வு காரணமாகும் இவர்கள் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ராஜபக்சேவின் கட்சியுடன் சிறிசேனாவின் சுதந்திரா கட்சி கூட்டணி வைத்துள்ளது. ராஜபக்சே பிரதமர் ஆகியுள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரணில் விக்கிரமசிங்கேவிற்கு எதிராக சுதந்திரா கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு கூட கொண்டு வந்தனர். அங்கு நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலை இவர்களுக்கு இடையில் பிரச்னையை உருவாக்கி உள்ளது. மேலும் கடந்த உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்சிகளும் மோசமாக மோதிக் கொண்டது.

பல நாட்களாக சுதந்திரா கட்சியின் சிறிசேனா, ரணிலை குறித்து நிறைய கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதுதான் நல்ல வழி என்று கூட சுதந்திரா கட்சி கூறி வந்தது. ஐக்கிய தேசிய கட்சி உடன் கூட்டணி வைத்திருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்று நிறைய விமர்சனங்களை சுதந்திரா வைத்து இருந்தது.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சே அபார வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா நிறைய இடங்களை வென்றது. இதுவும் சுதந்திரா கட்சியை சேர்ந்த சிறிசேனா, ரணிலை விட்டு விலகி மீண்டும் ராஜபக்சே பக்கம் வர காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இதில் மிக முக்கியமான காரணம் இன்னொன்று சொல்லப்படுகிறது. மஹிந்த ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சேவை கொலை செய்ய சிலர் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. ஆனால் இதுகுறித்து எந்த விசாரணைக்கும் ரணில் விக்ரமசிங்கே ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதை நேரடியாக சிறிசேனா எடுத்துக் காட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை முயற்சி இந்தியா இலங்கை உறவிலும் விரிசலை ஏற்படுத்தியது. அதன்பின்தான் சிறிசேனவை இந்தியா கொல்ல முயற்சி செய்கிறது என்று தகவல் வெளியானது. இந்த பொய்யான தகவலை பரப்பியது ரணில் விக்ரமசிங்கே அலுவலகம்தான் என்றும் புகார் சென்றுள்ளது. இப்படி பலதரப்பட்ட காரணங்களால்தான் கூட்டணி உடைந்துள்ளது.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!