வீடு புகுந்து ஆடை தொழிற்சாலை பெண் ஊழியர் வெட்டிக் கொலை – பெங்களூருவில் பயங்கரம்..!


பெங்களூருவில் வீடு புகுந்து ஆயத்த ஆடை தொழிற்சாலை பெண் ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கணவரை பிரிந்து வாழ்ந்தார்

பெங்களூரு ஆர்.எம்.சி. யார்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொரகுன்டே பாளையாவில் வசித்து வந்தவர் ருக்மினி (வயது 40). இவரது சொந்த ஊர் துமகூரு மாவட்டம் மதுகிரி ஆகும். ருக்மினிக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக, அவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் அவர் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். ருக்மினியின் கணவருடன் தான், 2 குழந்தைகளும் வளர்ந்து வருகின்றனர். பெங்களூருவில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக ருக்மினி வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் மதுகிரியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலையில் அவர் பெங்களூருவுக்கு திரும்பி வந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு ருக்மினியின் செல்போனுக்கு, அவரது தாய் தொடர்பு கொண்டார். ஆனால் ருக்மினி செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ருக்மினியின் தாய், அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினரை தொடர்பு கொண்டு பேசி மகள் வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறினார். அதன்படி, உறவினரும் ருக்மினியின் வீட்டிற்கு சென்றார்.

வெட்டிக் கொலை

அப்போது வீட்டின் ஒரு அறைக்குள் பலத்த வெட்டுக்காயங்களுடன் ருக்மினி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து உறவினர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் உடனடியாக ஆர்.எம்.சி.யார்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து ருக்மினியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது நேற்று முன்தினம் மாலையில் ருக்மினி வீட்டில் இருந்தபோது, மர்மநபர்கள் வீடு புகுந்து அவரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் வீட்டில் இருந்த நகை, பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. இதனால் ருக்மினியை கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஆர்.எம்.சி.யார்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!