பிளஸ்-2 மாணவர் தற்கொலை… பள்ளியில் நடந்தது என்ன? விசாரணையில் அதிர்ச்சித் தகவல்…!


கோவையை அடுத்த கருமத்தம்பட்டி ஆத்துபாலம் சாலையை சேர்ந்தவர் அண்ணாமலை சாமி. இவர் சோமனூரில் வெல்டிங் ஒர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவரது மகன் அருள்செல்வம்(17) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர் சரியாக படிக்கவில்லை என கூறி கடந்த 1 வாரத்துக்கு முன்பு வேதியியல் ஆசிரியை சங்கீதா(35) சக மாணவர்கள் முன்பு வைத்து அருள்செல்வத்தை திட்டியதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு முடிவெட்டவில்லை என கூறி அருள்செல்வத்தை ஆசிரியை சங்கீதா திட்டி உள்ளார். இதனால் அருள்செல்வம் மனமுடைந்தார். இதுகுறித்து அவர் தனது தந்தையிடம் தெரிவித்தார்.

அதன்பேரில் அண்ணாமலைசாமி பள்ளிக்கு சென்று வேதியியல் ஆசிரியை சங்கீதா தனது மகனை டார்ச்சர் செய்வதாக தலைமை ஆசிரியை காந்திமதியிடம் புகார் கூறினார்.

அவரை தலைமை ஆசிரியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இது சங்கீதாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்பிறகும் அருள் செல்வத்தை தொடர்ந்து ஆசிரியை திட்டி உள்ளார்.

இதனால் வெறுப்படைந்த மாணவர் அருள்செல்வம் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உத்திரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


வேலைக்கு சென்றிருந்த பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய போது அருள்செல்வம் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கூறினர். இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ஆறுச்சாமி மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ஆசிரியை சங்கீதா டார்ச்சர் செய்ததாலேயே எனது மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே தற்கொலைக்கு காரணமான ஆசிரியை சங்கீதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை சாமி போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன் பேரில் ஆசிரியை சங்கீதா மீது இந்திய தண்டணை சட்டம் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அருள்செல்வம் உடலை கைப்பற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இன்று அருள்செல்வம் உடல் பிரதே பரிசோதனை நடக்கிறது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, அருள்செல்வம் தற்கொலைக்கு ஆசிரியை சங்கீதா தான் காரணம் என அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளியில் என்ன நடந்தது? என்பது குறித்து தலைமை ஆசிரியை மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்த இருக்கிறோம். அதன்பேரில் அடுத் தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதேபோல் கல்வி அதிகாரிகளும் இன்று விசாரணை நடத்துகிறார்கள்.

Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!