இரட்டை குழந்தைகளைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பரிதாப சாவு..!


சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் பொதுமக்களிடையே மேலும் பீதி அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் எனும் ஒருவகை கொசுவால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும் காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலை வலி, தோல் நமைச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த காய்ச்சல் வந்தால் மக்களை கடுமையாக வாட்டி வதைக்கும்.

வீடுகளை சுற்றி தேங்கும் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும் இந்த கொசுக்கள் மனிதர்களை கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தெரியவந்தது. குறிப்பாக வடசென்னைக்குட்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற பகுதிகளில் டெங்குவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு, மாதவரம் பால் பண்ணை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதவரம் தணிகாசலம் நகரை சேர்ந்த இரட்டை குழந்தைகளான தர்ஷன், தீக்ஷா ஆகியோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தனர். மேலும் கடந்த வாரங்களில் புளியந்தோப்பை சேர்ந்த அஸ்லாம், பெரம்பூரை சேர்ந்த ரிஸ்வான், மணலியை சேர்ந்த கவியரசன் உள்பட 5 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இன்றும் சென்னையை சேர்ந்த ஒரு சிறுவன், டெங்குவால் பரிதாபமாக உயிரிழந்தான். அதுபற்றிய விவரம் வருமாறு: சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகர் 2வது தெருவை சேர்ந்த சாதிக். கூலி தொழிலாளி.

இவரது மனைவி ஆஷியா. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களது ஒரே மகன் சபிக் (3). இவனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சபிக் பரிதாபமாக இறந்தான். இதனால் அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஆண்டுதோறும் பருவமழை தொடங்குவதற்கு முன்பு டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இவற்றை முன்கூட்டியே தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. பாதிப்பு வந்தபின்புதான் அவசர, அவசரமாக தெருக்களை சுத்தம் செய்வதும், கழிவு நீரை அப்புறப்படுத்துவதுமாக உள்ளனர். சாதாரண நாட்களில் கொசு மருந்து அடிப்பதில்லை. பிளீச்சிங் பவுடர் தெளிப்பதில்லை. கழிவுநீர், குப்பைகள் குறித்து புகார் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் தொற்றுநோய் ஏற்படுகிறது. அதிகாரிகள் உடனுக்குடன் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

விழிப்புணர்வு கூட்டம்: வடசென்னை பகுதிகளில் டெங்கு பரவுவதன் எதிரொலியாக விழிப்புணர்வு கூட்டம் மாதவரம் அருகே ரெட்டேரியில் இன்று நடத்தப்பட்டது. மாதவரம் மண்டல உதவி ஆணையர் விஜயகுமார் தலைமை வகித்தார். இதில் வெள்ள பாதுகாப்பு சிறப்பு அதிகாரி சந்தோஷ் பாபு பேசுகையில், ‘தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். டெங்கு பரவாமல் இருக்க அனைத்து பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறோம். பொதுமக்கள் வீடுகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும், தேங்காய் ஓடு, டயர்களை வீடுகளில் வைத்திருக்க கூடாது, குடிநீர் நிரம்பிய பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும், காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் சிகிச்சை பெற வேண்டும்’ என்றார். இதில் அதிகாரிகள் ராமமூர்த்தி, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.- Source: tamilmurasu

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!