பத்திரிகையாளர் ஜமால் கசோகி துடிதுடிக்க இப்படி கொல்லப்பட்டாரா..? வெளியான பரபரப்பு தகவல்கள்..!


சவுதி தூதரகத்துக்குள் வைத்து பிரபல பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் , நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு செய்தியாளராகப் பணியாற்றியவர் ஜமால் கசோகி. இவர் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கொலை குறித்து சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி அரசையும் இளவரசர் முகமது பின் சல்மானையும் தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்த ஜமாலை தீர்த்துக்கட்ட சவுதி அரசு திட்டமிட்டு உள்ளது. துருக்கி நாட்டை சேர்ந்த ஹெயிஸ் செங்குஸ் என்ற பெண்ணுடன் ஜமாலுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஹெயிஸ் செங்குஸை திருமணம் செய்ய ஜமால் முடிவு செய்து, தொடர்ந்து துருக்கி நாட்டுக்கு சென்றுள்ளார்.

இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்கு விவாகரத்து வாங்கியது தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி சென்றுள்ளார்.இவரை மீண்டும், அக்டோபர் 2 ஆம் தேதி தூதரகத்துக்கு வருமாறு கூறி அனுப்பியுள்ளனர். சவுதி தூதரகத்துக்குள் சென்றவர் மீண்டும் திரும்பவே இல்லை.

இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தின் உள்ளேயே ஜமால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இவரை கொல்வதற்காக ரியாத்திலிருந்து 15 பேர் கொண்ட சிறப்பு குழு இஸ்தான்புல்லுக்கு சென்றுள்ளது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பாதுகாப்பாகச் செல்பவர்கள் தான் இந்த சிறப்பு குழு. ஜமாலை சித்ரவதைச் செய்து கொன்ற பின்னர், உடற்கூறு ஆய்வு நிபுணர் அவரின் உடலை 15 பகுதிகளாக வெட்டியுள்ளனர்.

பின்னர், உடல்பாகங்களை சூட்கேஸில் வைத்து அடைத்து காரில் கொண்டு சென்று காட்டுப் பகுதியில் வீசியுள்ளனர். தற்போது, வெளியாகியுள்ள இந்த தகவல் உலக நாடுகள் மத்தியில் அரசியல் ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா, சவுதியை எச்சரித்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு ஜெர்மன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாவது, நடந்த சம்பவம் குறித்து சவுதி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும், தற்போது இருக்கும் சூழ்நிலையில் சவுதி அரசாங்கத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயுதங்கள் தற்காலிகமாக நிறுதி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக ஜெர்மனி நான்காவது பெரிய ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!