ராம் லீலாவில் ராவணன் வேடம் அணிந்தவரும் பலி… 8 மாத குழந்தையுடன் மனைவி தவிப்பு…!


தசரா கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, தீமையை நன்மை வெற்றி கொள்வதை குறிக்கும் வகையில், ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்படுவது வழக்கம்.

நேற்று பஞ்சாப் மாநிலத்திலும் தசரா கொண்டாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றன. அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரெயில் தண்டவாளத்துக்கு அருகே உள்ள மைதானத்தில் நிகழ்ச்சி நடந்தது. பஞ்சாப் உள்ளாட்சித்துறை மந்திரி நவ்ஜோத்சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

வழக்கம்போல், அங்கு ராவணன் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதைக் காண்பதற்காக, சுமார் 600 பேர் திரண்டு இருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால், தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நகருக்கு செல்லும் ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவ்வழியாக அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், எதிர்திசையில் மற்றொரு ரெயில் வந்து கொண்டிருந்தது.

தசரா கொண்டாட்டத்துக்காக பட்டாசுகள் இடைவிடாமல் வெடித்துக் கொண்டிருந்தன. அந்த சத்தத்தால், ரெயில்கள் வரும் சத்தம், யாருக்கும் கேட்கவில்லை. அதனால், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், ஆர்வ மிகுதியால் அங்கேயே இருந்தனர். மேலும் பலரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

ரெயில்கள் மிக நெருக்கமாக வந்தபோதுதான் தெரிந்தது. ஆனால், தப்பிக்க வழி இல்லாததால், கண் இமைக்கும் நேரத்தில், அவர்கள் மீது ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. அடுத்த நொடியில், அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த கோர விபத்தில், 60 பேர் பலியானார்கள். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், உயிரிழப்பு 61 ஆக அதிகரித்துள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து, சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர், தனது காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். விபத்து காரணமாக, அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்து பற்றி டெல்லியில் விளக்கம் அளித்த ரயில்வே அதிகாரிகள், ரயில் தண்டவாளத்தில் கூடி நிற்பது அப்பட்டமான விதிமீறல் என்று தெரிவித்தனர். ரயில் பாதையை ஒட்டி நிகழ்ச்சி நடத்துவதற்கான எந்த அனுமதியும் கேட்கப்படவில்லை என்றும், இந்த விபத்தில் ரயில்வேயின் தவறு ஏதுமில்லை என்றும் அவர்கள் கூறினர்.

பஞ்சாப் அமைச்சரின் மனைவி பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து உள்ளூர் நிர்வாகத்துக்கு தெரிந்திருக்கும் என்றும், அதுதொடர்பாக ரயில்வேக்கு தெரிவிக்காதது நிர்வாகத்தின் தவறு என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, இந்த விபத்துக்கு உள்ளூர் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிய அவர்கள், விபத்து நடந்த பகுதி வளைவானது என்பதாலும், எங்கும் புகை சூழ்ந்திருந்ததாலும் மக்கள் கூட்டத்தை ரயில் ஓட்டுநரால் பார்த்து உடனடியாக நிறுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தனர். எனினும், உடனடியாக ரயில்வே மருத்துவக் குழுக்கள், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் நிர்வாகத்துக்கு உதவினர் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

தசரா விழாவில் ராம்லீலாவில் ராவணனின் வேடம் அணிதவர் தல்பீர் சிங் இவர் நேற்று நடந்த விபத்தில் மரணம் அடைந்து உள்ளார். “எனது மருமகளுக்கு ஒரு வேலை வழங்குவதற்கு அரசுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன், அவளுக்கு ஒரு 8 மாத குழந்தை உள்ளது என தல்பீர் சிங்கின் தயார் கூறி உள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!