தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கன மழை – மக்களே உஷார்..!


தென்மேற்கு வங்க கடலில் இலங்கை-தமிழகத்தையொட்டிய பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதேபோல் கேரளாவையொட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு- மாலத்தீவு பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

அரபிக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது இன்று பிற்பகல் குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறி அடுத்த 36 மணிநேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறுகிறது. அது புயலாக தீவிரம் அடைந்து வடமேற்கு திசைநோக்கி நகர்ந்து ஓமன் நாட்டு கடற்கரையை அடையும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்க கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியும் வருகிற 8-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது. ஒரே நேரத்தில் வங்க கடலிலும், அரபிக்கடலிலும் 2 காற்றழுத்த பகுதிகள் உருவாகிறது. இதனால் தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.

தற்போது தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளாவில் தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் 7-ந்தேதி காலை 8.30 மணி முதல் 8-ந்தேதி காலை 8.30 மணி வரை மிகபலத்த மழை மற்றும் மிதமிஞ்சிய மழை பெய்யும். 25 செ.மீ-க்கு மேல் கடும் மழைப்பொழிவு இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 8-ந்தேதி முதல் பலத்த மற்றும் மிக பலத்த மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எனவே மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!