பிறந்த நாளில் உயிரை விட்ட சகோதரர்கள்…. கதறியழுத பெற்றோர்..!


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நெடுந்தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 34). புதுச்சேரியில் உள்ள ஒரு மதுபான விற்பனைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சிவா. இவர்களுக்கு ஹரிணி (5) என்ற மகள், லட்சகன் (4) என்ற மகன் இருந்தனர். இவர்கள் இருவரும் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஹரிணி முதல் வகுப்பும், லட்சகன் எல்.கே.ஜி. வகுப்பிலும் படித்து வந்தனர்.

பள்ளியில் தற்போது காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஹரிணிக்கு நேற்று பிறந்த நாள் ஆகும்.

இதையொட்டி மகளின் பிறந்தநாளை கொண்டாட மோகன்தாஸ் தனது குடும்பத்துடன் வானூர் அருகே கரசானூர் கிராமத்தில் உள்ள உறவினர் விஜயாவின் வீட்டுக்கு சென்றனர்.

ஹரிணியின் பிறந்த நாளையொட்டி நேற்று மோகன்தாஸ் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருவக்கரையில் உள்ள வக்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கரசானூரில் உள்ள உறவினர் விஜயாவின் வீட்டுக்கு வந்தனர்.

விஜயா புதிதாக வீடு கட்டிக் கொண்டிருந்தார். அந்த வீட்டின் கட்டுமானப் பணிக்காக தரைதளத்தில் தண்ணீர் தொட்டி கட்டி, அதில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தனர். வீட்டுக்கு வெளியே விளையாடச் சென்ற 2 குழந்தைகளும் எதிர்பாராதவிதமாக அந்த தொட்டிக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினர்.

வீட்டுக்கு வெளியே விளையாடச் சென்ற குழந்தைகள் நீண்ட நேரமாகியும் காணாததால் அவர்களை தேடி குழந்தைகளின் தாய் சிவா வெளியே வந்து பார்த்தார். குழந்தைகளை காணாமல் தேடிப்பார்த்ததில் 2 குழந்தைகளும் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.

சத்தம்கேட்டு மோகன்தாசும், உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்து பார்த்தனர். தண்ணீர் தொட்டிக்குள் குழந்தைகள் மூழ்கி கிடப்பதை பார்த்ததும் உள்ளே இறங்கி அவர்களை மீட்டனர். உடனடியாக வானூர் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தைகளை கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகள் ஹரிணி, லட்சகன் ஆகிய இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!