அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களின் அலட்சியத்தால் அநியாயமாக உயிரிழந்த பெண்..!


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா மேலுமலை ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது27) கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (22) இவர்களுக்கு 3 வயதில் மிருத்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. நந்தினி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவர் பிரசவத்திற்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை 2.37 மணிக்கு நந்தினிக்கு பிரசவ வலி ஏற்பட்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனால் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு நந்தினிக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டது. பகல் 12 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். அதன் பிறகு அவரது உடலை உறவினர்கள் மேலுமலைக்கு எடுத்து சென்றனர். அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களின் அலட்சியத்தால் அநியாயமாக ஒரு உயிர் பறிபோய் விட்டதாக நந்தினியின் உறவினர் குற்றம் சாட்டினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

நேற்று அதிகாலை 2.37 மணிக்கு நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். சிறிது நேரத்தில் அவருக்கு ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டது. நாங்கள் ஆஸ்பத்திரி ஊழியரிடம் ரூ.700 கொடுத்து அவரை நன்றாக கவனித்து கொள்ளும்படி கூறினோம்.

அதன் பிறகு டியூப் ஒன்று வாங்கி வர வேண்டும் என்றும் அந்த டியூப் அரசு ஆஸ்பத்திரியில் ஸ்டாக் இல்லாததால் தனியார் ஆஸ்பத்திரியில் வாங்கி வருமாறு கூறினார்கள். நாங்கள் அந்த டியூப்பை 3 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்து கொடுத்தோம்.ஆனாலும் நந்தினியை சரியாக அவர்கள் கவனிக்கவில்லை.

தருமபுரி அல்லது சேலம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துசெல்ல அனுமதிக்கவில்லை. நாங்கள் அதிகம் வற்புறுத்தியதால் ஆம்புலன்சுக்கு தகவல் சொல்லி இருக்கிறோம். வரும் என்று கூறினார்கள். ஆனால் ஆம்புலன்சும் வரவில்லை. சிறிது நேரத்தில் நந்தினி இறந்தார் என்ற செய்தி மட்டும்தான் வந்தது.

இது குறித்து இன்று கலெக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்ப உள்ளோம். ஊழியர்களின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோய் விட்டது. இது குறித்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!