ஆண் சிசுவுக்கு ஆசைப்பட்டு கருக்கலைப்பு…. பலியான பெண்ணின் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி…!


மதுரை மாவட்டம், எழுமலை உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் ராமர். இவரது மனைவி ராமுத்தாய் (வயது 28). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராமுத்தாய் மீண்டும் கர்ப்பமானார். இதையடுத்து அங்குள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் பரிசோதனை செய்தனர்.

அப்போது ‘உங்கள் கருவில் இருப்பது பெண் சிசு’ தற்போது 7 மாதமாகி விட்டது’ என்று கூறியதாக தெரிகிறது.

4-வதும் பெண் குழந்தையா? என கவலையடைந்த ராமுத்தாய் கர்ப்பத்தை கலைப்பது என்று முடிவெடுத்தார். அப்போது அதே பகுதியில் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் நர்சு ஜோதி லட்சுமி அவருக்கு உதவ முன் வந்தார்.

அதைத்தொடர்ந்து ராமுத்தாய்க்கு, ஜோதி லட்சுமி வீட்டில் கருக்கலைப்பு நடந்தது. இதில் ராமுத்தாய் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக ராமர் கொடுத்த புகாரின் பேரில் உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் இறந்துபோன ராமுத்தாய் வயிற்றில் இருந்தது ஆண் சிசு என்பது தெரியவந்தது.

இந்த தகவலை அறிந்த ராமுத்தாயின் கணவரும், அவரது குடும்பத்தினரும் கதறித்துடித்தனர்.

எந்த குழந்தையாக இருந்தாலும் வளர்க்கலாம் என்று கூறினேன். என்னிடம் கேட்காமலேயே இப்படி முடிவெடுத்து விட்டாளே என்று ராமர் தனது வேதனையை தெரிவித்தார்.

இது குறித்து மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ மருதுபாண்டியனிடம் கேட்டபோது, ராமுத்தாயின் உடலை கூராய்வு செய்து பார்த்தபோது அவரின் வயிற்றில் ஆண் சிசு இருந்தது தெரியவந்தது. ராமுத்தாய் இறந்தநிலையில் குழந்தையும் வயிற்றிலேயே இறந்து விட்டது என்றார்.

உசிலம்பட்டி தாலுகா போலீசாரின் விசாரணையில் ராமுத்தாயின் கருவில் சிசுவின் இனம் தொடர்பாக தனியார் ஸ்கேன் சென்டர் முன்கூட்டியே உறவினர்களிடம் தெரிவித்தது உறுதியானது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஸ்கேன் மையத்திடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் ஸ்கேன் சென்டர்கள் புற்றீசல் போல முளைத்து வருகின்றன.

இதில் பெரும்பாலானவை அரசு அங்கீகாரம் பெறாதவை. தனியார் மருத்துவமனைகளுடன் தொடர்பில் இருந்து கொண்டு வாடிக்கையாளரிடம் பெரும் பணம் வசூலித்து கொண்டு தாயின் வயிற்றில் உள்ள சிசுவின் இனம் தொடர்பாக தகவல் கூறுகின்றனர்.

எனவே மதுரை மாவட்ட மருத்துவ இயக்குநரகம் அதிரடி விசாரணை நடத்தி போலி ஸ்கேன் சென்டர்களை களையெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!