இருமல் மருந்துக்கு அடிமையான சிறுவர்களால் விடுதி வார்டனுக்கு நடந்த விபரீதம்..!!


பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து 325 கி.மீட்டர் தொலைவில் உள்ள புர்னியே நகரத்தில் சிறார் குற்றவாளிகளுக்கான அரசு கூர்நோக்கு இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில், குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் ஏராளமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூர்நோக்கு இல்லத்தின் வார்டனாக பிஜேந்திர குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன் கூர்நோக்கு அறைகளில் வார்டன் பிஜேந்திர குமார் சோதனையில் ஈடுபட்டார். அப்போது, ஒரு அறையில் இருமலுக்கு பயன்படுத்தப்படும் இருமல் மருந்து பாட்டில்கள் அதிக அளவு இருந்ததை பிஜேந்திர குமார் கண்டுபிடித்தார். அந்த அறையில் இருந்த சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுவர்கள் போதைப்பொருளாக இருமல் மருந்தை பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து, சிறார்களுக்கான நீதி அமைப்பில் முறையிட்ட வார்டன் ஜிதேந்திர குமார், சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பதின்ம வயது சிறுவர்களையும் வேறு வேறு கூர்நோக்கு இல்லத்திற்கு மாற்ற அனுமதி பெற்றார்.

இதையறிந்த சிறுவர்கள் ஐந்து பேரும் ஆத்திரத்தில், வார்டன் ஜிதேந்திரகுமாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். கூர்நோக்கு அறையில் இருந்த 17-வயது சிறுவன் ஒருவனையும் சிறுவர்கள் சுட்டுக்கொன்று விட்டு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய ஐந்து பேரில், ஒரு சிறுவன் ஜனதா தளம் கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவரின் மகன் என போலீசார் தெரிவித்தனர். சிறுவர்களுக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.source-dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.