மறைந்த எம்.ஜி.ஆருக்கு நினைவக சிலை அமைக்க இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தல்..!!


மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த ஊரான இலங்கையின் கண்டியில் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு.ஜெயசூர்யா, கல்வி மந்திரி வேலுப்பிள்ளை ராதாகிருஷ்ணன், மத்திய மாகாண முதல்-மந்திரி சரத் ஏகநாயகே, கண்டி எம்.பி. வேலுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் பாக்யராஜ் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. இதில் நடிகர்கள் பாண்டியராஜன், ரமேஷ் கன்னா, நடிகை மதுமிதா கலந்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை கொழும்புவில் உள்ள அவரது டெம்பிள் ட்ரீஸ் இல்லத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் குமார் ராஜேந்திரன் சந்தித்தார்.

அப்போது கண்டியில் எம்.ஜி.ஆர். நினைவகம் மற்றும் திருவுருவசிலை அமைக்க வேண்டும். இதனால் 2 நாடுகளுக்கு இடையே அதிக நல்லுறவு வளரும்.

மேலும் இங்கு லட்சக்கணக்கில் தமிழக சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கண்டி எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு புனித தலமாக மாறும் என்றார்.

அதை உன்னிப்பாக கேட்ட விக்ரமசிங்கே, திரையுலகிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆர். ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்தார். மேலும் குமாரின் வேண்டுகோளை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எம்.ஜி.ஆர். உருவம் பதித்த பட்டு சால்வையை குமார் அணிவித்தார்.

இச்சம்பவத்தின்போது அமைச்சர் செங்கோட்டையன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.source-maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!