பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டி போட்ட‘மங்குட்’ புயல்: பலியானவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு

பிலிப்பைன்ஸ் நாட்டின் லுசான் தீவை ‘மங்குட்’ புயல் நேற்று தாக்கியது. மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் தொடங்கி 305 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியது. கன மழையும் பெய்தது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலத்த காற்றின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சாய்ந்தன. மின்வினியோகம் தடை பட்டு உள்ளது. வீடுகள் இருளில் மூழ்கின. தகவல் தொடர்பு சேவையும் முடங்கி உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன.

மேலும் இந்த புயலின் பிடியில் 40 லட்சம் பேர் சிக்கி உள்ளனர். கடலோரப்பகுதிகளில் பல்லாயிரகணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. மீட்பு பணிகளை பிலிப்பைன்ஸ் அரசு முடுக்கி விட்டு உள்ளது. புயலுக்கு 2 மீட்பு படை வீரர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மங்குட்’ புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
– Source: dailythanthi


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.