சொத்தை எழுதி தராததால் மனைவியை தீர்த்துகட்டினேன் – கணவர் பரபரப்பு வாக்குமூலம்..!


சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58). விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி உமாராணி(41). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி காலை வீட்டின் அருகில் உள்ள வாய்க்காலில் பிணமாக கிடந்தார்.

அப்போது அங்கு வந்த உமாராணியின் அண்ணன் உமாசங்கர், தனது தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாக குமராட்சி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, இறுதிசடங்கை தடுத்து நிறுத்தி உமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சந்தேக மரணம் என்று கூறி வழக்குப்பதிவு செய்தனர்.

பிரேத பரிசோதனையில் உமாராணியின் தலையில் காயம் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் அவரை யாரோ அடித்து கொலை செய்து இருக்கிறார்கள் என்பதை போலீசார் உறுதிசெய்தனர். தொடர்ந்து இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் செல்வராஜ் மேலவன்னியூர் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டனிடம் சரணடைந்தார். அப்போது அவர், தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், அவர் குமராட்சி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து செல்வராஜை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது செல்வராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த நான், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். தொடர்ந்து எனக்கும், எனது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் உமாராணி, விவாகரத்து கேட்டு விருத்தாசலம் கோர்ட்டில் மனு செய்தார். அதில் எங்களிடம் சமரசம் செய்து குடும்பம் நடத்த அறிவுறுத்தினர். இதேபோல் குமராட்சி போலீஸ் நிலையத்திலும் குடும்ப பிரச்சினை தொடர்பான வழக்கு உள்ளது.

உமாராணி பெயரில் உள்ள சொத்துகளை எனது பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு கூறினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்தேன்.

விவசாய நிலத்தில் நின்று கொண்டிருந்த உமாராணியின் தலையில் கத்தியால் குத்தினேன். பின்னர் அவரை வாய்க்காலில் தள்ளிவிட்டு கொலை செய்தேன். பின்னர் எதுவும் தெரியாததுபோல் நாடகமாடினேன். இருப்பினும் போலீசாருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டதை அறிந்து, கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!