போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்ததற்கு காரணம் இதுதானா?


நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் முத்துச்செல்வன்(வயது 36). இவர் தென்காசி அருகே உள்ள அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். முத்துச்செல்வனுக்கும், பண்பொழியைச் சேர்ந்த பத்மாவதிக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

முத்துச்செல்வன் பண்பொழியில் சொந்தமாக வீடு கட்டியுள்ளார். அங்கு மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். தற்போது, பத்மாவதி 2-வது பிரசவத்துக்காக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று உள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலையில் பத்மாவதி தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் முத்துச்செல்வன் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பத்மாவதி, தனது உறவினர் ஒருவர் மூலம் வீட்டிற்கு சென்று கணவரை பார்த்து விட்டு வரும்படி அனுப்பினார். அந்த நபர், பண்பொழியில் உள்ள முத்துச்செல்வன் வீட்டிற்கு சென்று கதவை தட்டினார்.

நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து அவர், அங்குள்ள ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே தூக்கில் தொங்கிய நிலையில் முத்துசெல்வன் பிணமாக கிடந்துள்ளார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து உடனடியாக செங்கோட்டை போலீசுக்கும், பத்மாவதிக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முத்துச்செல்வன் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

விசாரணையில், முத்துச்செல்வன் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் அவர் ஒரு வாரமாக வேலைக்கு செல்லவில்லை.

இதன் காரணமாக அவர் சம்பவத்தன்று இரவு பண்பொழியில் உள்ள தனது வீட்டில் வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

எனினும், முத்துச்செல்வன் உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து செங்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!