எந்திரன் படத்தால் இயக்குநர் ஷங்கருக்கு அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்…!


ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ படத்தின் கதை தொடர்பான வழக்கில் ஆஜராகாத இயக்குனர் ஷங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.
இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.


இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, கூடுதல் அவகாசம் கேட்டு இயக்குநர் ஷங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று, நீதிபதி சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஷங்கர் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, கால அவகாசம் கோரிய இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்த தொகையை புளூ கிராஸ் அமைப்புக்கு வழங்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!