தந்தையின் கை தவறியதால் 11 நாளே ஆன குழந்தைக்கு ஏற்பட்ட துயரம்…!


தந்தையின் கவனக்குறைவால் பிறந்து 11 நாட்களே ஆன ஆண் குழந்தை வெந்நீரில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது.

ஆண் குழந்தை

புனே கோந்த்வா பகுதியை சேர்ந்தவர் முகமது சேக். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில், ஆண்குழந்தை பிறந்து 11 நாட்கள் தான் ஆகின்றன.

இந்த நிலையில், நேற்று காலை மகனை கையில் வைத்து கொண்டு முகமது சேக் கொஞ்சி மகிழ்ந்தார். மேலும், ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு மகனை தூக்கி சென்றபோது, திடீரென அவரது கை தவறி குழந்தையை கீழே போட்டார்.


90 சதவீதம் தீக்காயம்

கீழே சூடாக வெந்நீர் நிரப்பப்பட்டிருந்த வாளியில் குழந்தை விழுந்தது. இதனால், வேதனை தாங்க முடியாமல், அந்த பச்சிளங்குழந்தை அழுது துடித்தது. இதை பார்த்து பதறிப்போன முகமது சேக், உடனே மகனை தூக்கி கொண்டு சசூன் ஆஸ்பத்திரிக்கு ஓடினார்.

வெந்நீரில் விழுந்ததில் குழந்தையின் உடலில் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், உயிருக்கு போராடி வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

தந்தையின் கவனக்குறைவால், பிறந்து 11 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை வெந்நீரில் விழுந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!