ஊட்டி மலை ரெயிலில் புதுமண தம்பதி உல்லாச பயணம்…. எவ்வளவு கட்டணம் தெரியுமா..?


மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைரெயிலில் வெளிநாட்டு தம்பதியர் தேனிலவு பயணம் மேற்கொண்டனர். 153 பயணிகள் செல்லும் ரெயிலில் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் கட்டணம் செலுத்தி இருவர் மட்டுமே சென்றனர்.

புதுமண தம்பதிகளுக்கு தேனிலவு என்றால் ஊட்டி, கொடைக்கானல் கொள்ளை விருப்பமாக அமையும். கொஞ்சம் வசதிபடைத்தவர்களாக இருந்தால் தேனிலவுக்கு குறிப்பிட்ட வெளிநாட்டு பயணத்துக்கு செல்ல விரும்புவார்கள். இந்த வகையில், இளம்தம்பதியருக்கு தேனிலவுக்காக செல்லும் ஆசை என்பது சிறகடித்துக்கொண்டே இருக்கும். இதனால் புதுமண தம்பதிகள், திருமணம் முடிந்த கையோடு எங்காவது நடையை கட்ட தொடங்கி விடுவார்கள். ஆனால் வெளிநாட்டை சேர்ந்த தம்பதியருக்கு ஊட்டி மலை ரெயிலில் தேனிலவு செல்ல ஆசை ஏற்பட்டது. அது பற்றி பார்க்கலாம்:-

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைரெயில் புறப்பட்டு பகல் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது. அதன்பின்னர் மீண்டும் அங்கிருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது. மலைரெயிலில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில்காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்ட மலைரெயிலை யுனஸ்கோ நிறுவனம் கடந்த 2005-ம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.

இந்த நிலையில் ஊட்டி மலை ரெயிலின் சிறப்புகள் குறித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரகாம் வில்லியம் லைன் (வயது30) என்பவர் கேள்விப்பட்டார். இவர் அங்குள்ள என்.எச்.எஸ். மருத்துவமனையில் பொறியியல் பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சில்வியா பியோசிக் (27). இவர் பல்வேறு நாடுகளில் உள்ள சிறப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் ஊட்டி மலைரெயிலில், தேனிலவு பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து மகிழ வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.


இதைத்தொடர்ந்து சிறப்பு மலை ரெயிலில் பயணம் செய்வதற்கு கிரகாம்வில்லியம் லைன் சம்பந்தப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. (இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்) ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்து 321-ஐ கட்டணமாக செலுத்தினார். இதையடுத்து ஐ.ஆர்.சி.டி.சி. சிறப்பு மலை ரெயிலை கணவன்-மனைவிக்காக நேற்று காலை இயக்கியது. இதற்காக கிரகாம் வில்லியம் லைன் தனது மனைவியுடன் சென்னையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் காலையில் மேட்டுப்பாளையம் வந்தடைந்தார். அவருடன் ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலர் சசிதர் வழிகாட்டியாக வந்திருந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை 7.10 மணிக்கு ஊட்டிக்கு செல்லும் மலைரெயில் புறப்பட்டு சென்றது. அதன்பிறகு சிறப்பு மலைரெயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக மேட்டுப்பாளையம் ரெயில்நிலையம் வந்த தேனிலவு தம்பதி இருவரும் ஊட்டி மலை ரெயிலை வியப்புடன் கண்டு ரசித்தனர். அவர்களிடம், மலைரெயிலின் சிறப்புகள் குறித்து ரெயில் நிலைய மேலாளர்கள் வேதமாணிக்கம். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விளக்கி கூறினார்கள். இதையடுத்து காலை 9.10 மணிக்கு 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட மலைரெயிலில் கணவன்-மனைவி இருவர் மட்டும் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றனர்.

அவர்கள், மலைப்பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளைக்கண்டு ரசித்த வண்ணம் மலைரெயிலில் பயணம் செய்தனர். இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்த முகத்துடன் காணப்பட்டனர். முன்னதாக அவர்கள் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் மற்றும் ரெயில் பெட்டிகள், என்ஜின் உள்ளிட்டவைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.இந்த மலை ரெயிலில் 153 பயணிகள் பயணம் செய்யலாம். கட்டணமாக ரூ.7,500 மட்டுமே கிடைக்கும். ஆனால் கிரகாம்வில்லியம் லைன் மற்றும் அவரது மனைவி சில்வியா பியோசிக் ஆகியோர் பயணம் செய்ய ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் கட்டணமாக செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்த கூடுதல்கட்டணம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘ஊட்டி மலை ரெயில் ஏற்கனவே நஷ்டத்தில் ஓடுகிறது. இருந்தாலும் சுற்றுலா பயணிகளுக்காக இந்த ரெயில் விடப்படுகிறது. அத்துடன் பயணிகளுக்கு மிகக்குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் சிறப்பு ரெயில் என்று எடுத்துக்கொண்டால் ஒரு நபருக்கு ரூ.1,100 கட்டணமாக வசூலிக்கப்படும். அத்துடன் தேனிலவு தம்பதியினர் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் பதிவு செய்து உள்ளனர். அவர்களும் தனியாக கட்டணம் எடுத்து இருப்பதால்தான் கட்டண தொகை அதிகமாக இருக்கிறது’ என்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!