மன்னாரில் காற்றாலை மின்திட்டம் அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி…!


மன்னாரில் காற்றாலை மின்திட்டத்தை அமைக்கவும், 3400 கி.மீ நீளமான கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யவும், ஆசிய அபிவிருத்தி வங்கி, 350 மில்லியன் டொலர் கடனுதவியை சிறிலங்காவுக்கு வழங்கவுள்ளது.

இதுதொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும், சிறிலங்கா நிதியமைச்சுக்கும் இடையில் நேற்று இரண்டு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.

340 கி.மீ நீளமான தேசிய நெடுஞ்சாலையை உள்ளடக்கியதாக, 3400 கி.மீ கிராமிய வீதிகளை தரமுயர்த்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 150 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்கவுள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் இந்த வீதி அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

அத்துடன் மன்னாரில், காற்றாலை மின்திட்டத்தை அமைக்க, 200 மில்லியன் டொலர் கடனுதவியையும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மன்னார் தீவில் 100 மெகாவாட் உற்பத்தி திறன்கொண்ட காற்றாலைப் பண்ணை அமைக்கப்படவுள்ளது.

256.7 மில்லியன் டொலர் செலவிலான இந்தத் திட்டத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி, 200 மில்லியன் டொலரை கடனாக வழங்கவுள்ளது. எஞ்சிய 56.7 மில்லியன் டொலரை இலங்கை மின்சாரசபை முதலீடு செய்யும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!