போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண்!

திருவேற்காடு அருகே உள்ள கோலடி, செந்தமிழ் நகரை சேர்ந்தவர் கஜேந்திரன். கடைகளுக்கு பிஸ்கட், சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் வினியோகம் செய்யும் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி ரேணுகா (வயது 34). வயதான நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று பணிவிடை செய்து மருந்துகள் கொடுக்கும் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

இவரது வீட்டில் கழிப்பறை கட்டும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. கழிவறையின் மேல் பகுதியில் போடப்பட்ட ஓடுகள் அருகில் உள்ள அமிர்தவல்லி என்பவரின் வீட்டின் பின்பக்க கதவை திறக்க முடியாதபடி போடப்பட்டு இருந்தது. மேலும் கட்டுமான பணிக்காக வைக்கப்பட்ட கம்பும் வாசலை மறித்தபடி இருந்தது.

இதனால் ரேணுகா குடும்பத்தினருக்கும், அமிர்த வல்லி குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது பற்றி இரு தரப்பினரும் திருவேற்காடு போலீசில் புகார் அளித்தனர்.

நேற்று மாலை இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ரேணுகாவையும், அவரது கணவர் கஜேந்திரனையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் போலீஸ் நிலையம் வந்தனர். கஜேந்திரனை மட்டும் போலீஸ் நிலையத்துக்குள் அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்தனர். ரேணுகா போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டு இருந்தார்.

அப்போது போலீசார் ஒருதலைபட்சமாக விசாரணை செய்வதாக கூறிய ரேணுகா திடீரென தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடல் கருகிய ரேணுகாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ரேணுகா பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை எற்படுத்தி உள்ளது.

பலியான ரேணுகா, கஜேந்திரனின் 2-வது மனைவி ஆவார். இவர்களுக்கு சைலஜா என்ற மகள் உள்ளார். கஜேந்திரனின் முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். முதல் மனைவி மூலம் அவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ரேணுகா குடும்பத்தினருக்கும், அமிர்தவல்லி குடும்பத்தினருக்கும் அடிக்கடி தொடர்ந்து சிறு சிறு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

பிரச்சனைக்குரிய கழிவறை கட்டிடத்தின் மேற்கூரை.

ரேணுகா தனது வீட்டின் பின் பகுதியில் கழிவறை கட்டத் தொடங்கியதுமே அவர்களுக்குள் இருந்த தகராறு மோதலாக வெடித்து இருக்கிறது.

நேற்று காலையும் அவர்கள் கடுமையாக சண்டை போட்டுள்ளனர். இதுபற்றி இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்ததால் போலீசார் சமாதானம் பேசினர். அப்போது பிரச்சனைக்குரிய கழிவறையின் மேல் பகுதி ஓடுகளை அகற்ற வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

மேலும் ரேணுகாவையும், அவரது கணவர் கஜேந்திரனையும் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு கூறி இருக்கிறார்கள்.

இதனால் போலீசார் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக ரேணுகா கூறி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக ரேணுகாவின் கணவர் கஜேந்திரன் கூறியதாவது:-

கடந்த ஒரு மாதமாக எங்களுக்கும், அமிர்தவல்லி குடும்பத்தினருக்கும் தகராறு இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமிர்தவல்லி வீட்டின் பின்பக்க வாசலில் படிக்கட்டு வைத்தனர். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.

இதனால் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இது பற்றி போலீசில் புகார் செய்த போது அமிர்தவல்லி குடும்பத்தினருக்கு ஆதரவாக பேசினர். அவர்கள் படிக்கட்டு வைக்கலாம் என்று தெரிவித்து விட்டனர்.

இந்த நிலையில் நாங்கள் கழிவறை கட்டிய போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. நேற்று காலை இரு தரப்பினரும் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் எங்களை மட்டும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அங்கு சென்றதும் மீண்டும் பிரச்சனை செய்தால் கைது செய்து சிறையில் அடைப்போம் என்று மிரட்டினர்.

முக்கிய பிரமுகர்கள் சிலரின் சிபாரிசால் எங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக போலீசார் செயல்பட்டனர். இந்த மனவேதனையில் மனைவி ரேணுகா தற்கொலை செய்து இருக்கிறார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரேணுகா இறந்ததையடுத்து அசம்பாவிதத்தை தடுக்க அவரது வீடு உள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல் திருவேற்காடு போலீஸ் நிலையத்துக்கும் கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் திருவேற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. -Source:Maalaimalar

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.