போலீஸ் விசாரணைக்கு பயந்து 15 வயது சிறுவன் தற்கொலை… நடந்தது என்ன..?


திருவேற்காடு, அபிராமி நகரில் வசித்து வருபவர் சின்னா (வயது 48). ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். சின்னா அயப்பாக்கம் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி ஜெயசீலீ திருவேற்காடு கோவிலில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகன் டேவிட் (15).

திருவேற்காட்டில் மோட்டார்சைக்கிள் அதிக அளவில் திருடு போவதாக திருவேற்காடு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் டேவிட்டிடம் விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி அவரை திருவேற்காடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையின் போது போலீசார் அந்த சிறுவனை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீசார், டேவிட்டிடம் 21–ந்தேதி (நேற்று) மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் எனக்கூறி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

எனவே டேவிட் நேற்று தன் பெற்றோருடன் போலீஸ் நிலையத்துக்கு புறப்பட்டார். போலீஸ் நிலையத்துக்கு அருகே சென்றதும், டேவிட் தன் பெற்றோரிடம் தான் சிறுநீர் கழித்து விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை.


இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவனை அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.

‘ஒருவேளை போலீசுக்கு பயந்து வீட்டுக்கு சென்றிருப்பானோ’ என அவனுடைய பெற்றோர் நினைத்தனர். எனவே அவர்கள் உடனடியாக வீட்டுக்கு சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டுக்குள் டேவிட் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் டேவிட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே தன் மகன் சாவுக்கு போலீசாரே காரணம் என டேவிட்டின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து டேவிட் பெற்றோர் கூறியதாவது:–

மோட்டார்சைக்கிள் திருடு போனது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் டேவிட் உள்ளிட்ட 3 சிறுவர்களை திருவேற்காடு போலீசார் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அடித்து, உதைத்து விட்டு இரவுதான் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதே போல் கடந்த 2 நாட்களாக காலையில் போலீஸ் நிலையம் அழைத்து செல்வது, அங்கு அடித்து, உதைத்துவிட்டு இரவில் வீட்டுக்கு அனுப்பி வைப்பது என போலீசார் செய்து வந்து உள்ளனர்.


போலீசார் அடித்ததில் என் மகன் நடக்க முடியாமல் உடல் வலியால் மிகவும் கஷ்டப்பட்டான். இன்று (நேற்று) காலை மீண்டும் விசாரணைக்கு போலீசார் அழைத்ததால் பயந்து போன என் மகன் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எங்களிடம் அழுதபடி கூறினான்.

அதற்கு ‘நாங்கள் உன்னுடன் போலீஸ் நிலையம் வந்து, போலீசாரிடம் பேசி உன்னை அழைத்து வந்து விடுகிறோம்’ என கூறி சமாதானப்படுத்தி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றோம். ஆனாலும் போலீசுக்கு பயந்து போன என் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

திருவேற்காட்டில் எங்கு குற்ற சம்பவம் நடந்தாலும், அதில் குற்றவாளிகள் கிடைக்கவில்லை என்றால் போலீசார் இங்கு வந்து எங்களின் பிள்ளைகளை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று அடித்து உதைக்கின்றனர்.

தற்போது போலீசாரின் மிரட்டலால் மேலும் 2 சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி வருகின்றனர். என் மகன் இறப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை என் மகனின் உடலை வாங்க மாட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!