113 குற்றவழக்குகளில் தொடர்புடைய பெண் தாதா கைது

113 குற்றவழக்குகளில் தொடர்புடைய 62 வயதான பெண் தாதா பஷீரான் டெல்லியிலுள்ள சங்கம் விஹார் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சங்கம் விஹாருக்கு அருகேயுள்ள ஒரு காட்டில் சிதைவுற்ற நிலையில் ஒரு சடலம் கிடந்தது. சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார், டெல்லியின் பெண் தாதாவான மம்மி என்றழைக்கப்படும் பஷீரான் கொலை செய்ததை கண்டறிந்தனர். இந்நிலையில் பஷீரானை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். போலீசார் தன்னை கைது செய்ய வருவதை அறிந்த பஷீரான் தப்பியோடி தலைமறைவு வாழ்க்கை வந்தார். இந்நிலையில் பஷீரானின் வீடு மற்றும் பல்வேறு சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவரது சொத்துகள் அதிகாரிகளால் முடக்கப்பட்டன.

இந்நிலையில் 7 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவு வாழ்க்கை வந்த பஷீரான் பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிய வர, அவர் சங்கம் விஹார் பகுதியில் கைது செய்யப்பட்டார். தனது 8 மகன்களுடன் கொலை, திருட்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றங்களை செய்து வந்த பஷீரான் கைது குறித்து துணை போலீஸ் கமிஷ்னர் ரோமில் பானியா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கடந்த 16 வருடங்களாக குற்றங்கள் செய்து வரும் பஷீரான், 9 வருடங்களாக தனது 8 மகன்கள் உதவியுடன் பல்வேறு குற்றவழக்குகளில் ஈடுபட்டு வந்தார். கொலை மற்றும் கொலை முயற்சி என இவர் மீது 42 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தற்போது இவரது மகன்களில் 2 பேர் சிறையிலும், 4 பேர் தலைமறைவாகவும் உள்ளனர் எனக் கூறினார்.-Source:dailythanthi

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.