பொதுவா 6 அடிதான் தோண்டுவாங்க… இங்க 10 அடி தோண்டியதால் ஷாக்கான ஆய்வாளர்கள்…!


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, முன்னோர்களான நம் பழந்தமிழர்கள், ஆற்று நதிக்கரையோரம் தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டார்கள். நீர் வசதியை ஆதாராமாகக் கொண்டு தான் மக்களின் குடித்தனங்கள் அமைக்கப் பட்டன. இது இயல்பானது.

நீர் இன்றி அமையாது உலகு என்று, வள்ளுவன் குறிப்பிட்டது போலத் தான் தங்கள் வாழ்க்கைத் தடங்களை புத்திசாலித்தனமாக அவர்கள் அமைத்துக் கொண்டார்கள்.

மதுரை நகருக்கு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கொந்தகை என்ற பகுதியில் தான், இந்த மாதிரியான நமது பழந்தமிழர்களின் நாகரிகமான வாழ்விடங்களை ஆராய்ந்து காண முடிந்தது. இந்திய தொல்லியல் துறை, இந்தக் கொந்தகை என்ற கீழடியில் தங்களது அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டனர்.

தனியாருக்குச் சொந்தமான தென்னந் தோப்பில், அவர்களுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தப் படி தான் இந்த அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது. அகழ்வாராய்ச்சிக்காக 10 அடி ஆழம் வரை குழிகள் வெட்டப்பட்டன.


உள்ளே தோண்டத் தோண்ட நமது பழந்தமிழர்களின் வாழ்வியல் நிலைகளை, அதற்குண்டான சான்றுகள் மூலமாக கண்டறிய முடிந்தது. கருப்பு சிவப்பு பானை ஓடுகள் நிறைய கிடைத்தன. இவை சங்க காலத்தைச் சேர்ந்தவை.

பல பானை ஓடுகளில் பழமையான, தமிழ் பிராமி எழுத்துக்களின் வடிவங்களைக் காண முடிந்தது. தற்போது, எவர்சில்வர் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில், பெயர்கள் வெட்டியிருந்ததைப் போலவே, அப்போதிருந்த நம் மக்கள், மண் பாண்டங்களில் பிராமி எழுத்தில் பெயர்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

அந்த கால கட்டத்தில், கடல் வாணிபத்திலும், கடல் கடந்த நட்பிலும், சிறந்து விளங்கியிருந்தார்கள் நம் தமிழர்கள். அதற்கு ஆதாரமாக, ரோமானியர்கள் பயன் படுத்தும், கண்ணாடிக் குடுவைகளையும், உடைந்த அதன் பாகங்களையும் காண முடிந்தது.

யானைத் தந்தத்தால் ஆன தாயக் கட்டை, சுடு மண் பொம்மைகள், அழகிய கண்ணாடிப் பொருட்கள், கண்ணடியால் ஆன ஆபரணச் சிதறல்கள், பாதுகாப்பிற்காக உபயோகப்படுத்தியிருந்த, இரும்பிலான ஆயுதங்கள், போன்றவையும் குவியல்களாகக் கிடைத்துள்ளன.


இரும்பு ஆயுதங்கள் செய்வதற்கென்று, இரும்பு உருக்கு ஆலைகளையும், உருவாக்கியிருந்திருக்கிறார்கள். அதற்கான கட்டுமான அமைப்புகள், இரும்பை உருக்கி வார்க்கும் போது, கழிவுகள் செல்வதற்காக ஏற்படுத்தப் பட்ட பாதைகள், என 2000 ஆண்டுகளுக்கு முன்பாக, நம் முன்னோர்கள் கடைப்பிடித்த தொழில் நுட்பங்கள், இந்த விஞ்ஞான யுகத்திலும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

சுடு மண்ணால் செய்யப் பட்ட உறைகளைக் கொண்டு உறை கிணறுகளையும் அமைத்திருக்கிறார்கள். அதன் தடங்களை இன்னும் அப்படியே அந்தப் பழமை மாறாமல், நம்மால் காண முடிகிறது.

தங்கள் குடியிருப்புகளுக்காக அவர்கள் கட்டிய கட்டிடங்கள், சுவர்களாக தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நல்ல அகலமான சுடு செங்கற்கல்லைக் கொண்டு, இந்தக் கட்டுமானங்கள் அமைந்துள்ளன.

இதில், நாம் மிகவும் பெருமைப் பட்டுக் கொள்ளும் விஷயம் என்னவென்றால், இந்த அகழ்வாராய்ச்சியில், எந்த இடத்திலும், ஒரு சமயம் சார்ந்த எந்தக் குறியீடுகளும், அடையாளங்கள் எதுவும் இல்லாதது தான்.


அப்போது, நம் முன்னோர்கள், இந்த மாதிரியான சமய சர்ச்சைகளில் சிக்காமல், தங்கள் வாழ்க்கைப் பாதையில் செவ்வனே பயணம் செய்திருக்கிறார்கள். அறிவியல் மற்றும் தொழில் நுட்பமும் நிறைந்த இந்தக் காலத்தில், நாம் ஒவ்வொருவரும் ஒரு சமயத்தைச் சார்ந்து தான் வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

இதனால் ஏற்படும் குழப்பங்களைக் கொண்டு சிலர் நம்மை தவறாக வழிகாட்டும் போதும், அவற்றையும், வேறு வழியில்லாமல், தாங்கிக் கொண்டு, அதைக் கடந்து தான் நாம் தற்போது போராட்டங்களுடன் நிலையில்லாத வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நமது சமயம் சார்ந்த சிந்தனை மற்றும் செயல்கள் எல்லாம், நம்மை ஒரு குறுகிய வட்டத்துக்குள் தான் கொண்டு வந்திருக்கின்றன. அக்காலத் தமிழர் பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், கடல் கடந்தும், மொழி கடந்தும் மனித நேயம் வளர்ந்திருந்தது.

அவர்களது நட்பு மற்றும் உறவு நிலைகள் பரந்து விரிந்திருந்ததையும், கீழடியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள ஆய்வுகள், நாம் இன்னும் இவைகளைப் பார்த்துப் படிக்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்களைப் பற்றி சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!