வாஜ்பாயிக்கு என் கண்ணீர் வணக்கம்… கவிஞர் வைரமுத்து இரங்கல்…!


‘இந்தியா எழுந்து நின்று அழுகிறது’ என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியப் பெருந்தலைவர் வாஜ்பாயின் மரணம் என்பது ஒன்றல்ல. ஒரு தலைவருக்கும், ஒரு கவிஞருக்கும் என்று 2 மரணங்கள் நேர்ந்திருக்கின்றன. இந்த மாதம் மரணத்திற்கு இலக்கியப் பசி போலும். தெற்கே ஓர் இமயமாகத் திகழ்ந்த கருணாநிதியையும், வடக்கே ஒரு கடலாகத் திகழ்ந்த வாஜ்பாயையும் ஒரே மாதத்தில் உண்டு முடித்திருக்கிறது. வாஜ்பாயிக்கான கண்ணீர் மண்தொடும் பொழுது அவருக்கான பெருமைகள் விண்தொடும் என்பது எனது நம்பிக்கை.

அவருக்கு மதநேயம் உண்டு; ஆனால் அதைத்தாண்டிய மனிதநேயம் உண்டு. தன் மொழியைத் தாழவிடாத மொழிப்பற்று உண்டு; ஆனால் இன்னொரு மொழியைத் தாழ்த்திவிடாத தனிப் பண்பு உண்டு. கவிதை மனம்கொண்ட ஒருவன் பொதுவாழ்வில் புகுந்தால் அவன் கடைசிவரை கண்ணியமாகவே இருப்பான் என்பதற்கு வாஜ்பாயின் வாழ்வே எடுத்துக்காட்டு.

அமெரிக்கா அழைத்துச்சென்ற பண்பு

அவர் பிரதமராக இருந்தபோது அவரது கவிதைகளின் தமிழ்ப் பதிப்பை பிரதமர் இல்லத்தில் வெளியிட்ட நிகழ்ச்சிக்கு என்னை அழைத்த அன்பு இப்போது என் கண்களில் ஈரமாகிறது. அகில இந்தியக் கவியரங்குக்கு என்னை அமெரிக்கா அழைத்துச்சென்ற பண்பும் நினைவில் கசிகிறது.


இந்தியும், தமிழும் இரு துருவங்கள் என்று கருதப்படுகிறபோது, காலத்தால் அழியாத திருவள்ளுவரையும், விடுதலைக் கனல் மூட்டிய பாரதியையும் தந்த தமிழ்மொழி மீது நான் அளவற்ற அன்பும் பற்றும் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னபோது ஒரு கட்சித் தலைவராக இல்லாமல் தேசியத் தலைவராகவே உயர்ந்து நின்றவர் வாஜ்பாய்.

கண்ணீர் வணக்கம்

கொள்கை வேறுபாடுகளுக்கு மத்தியிலும் மனிதநேயம் என்ற புள்ளியில் இதயங்கள் இளைப்பாற முடியும் என்று சொல்லிப் போகிறது வாஜ்பாயின் வாழ்க்கை. அதைத்தான் அரசியலின் நிகழ்காலம் நெஞ்சில் எழுதிக்கொள்ள வேண்டும்.

இந்தியா எழுந்து நின்று அழுகிறது. ஒரு கண்ணால் ஒரு தலைவனுக்காக; மறு கண்ணால் ஒரு கவிஞனுக்காக. வாஜ்பாயிக்கு என் கண்ணீர் வணக்கம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!