அ.தி.மு.க போல் தி.மு.க.விலும் பிளவு ஏற்படுமா..? கட்சிக்காரரிடம் அழகிரி வைத்த புது செக்…!


தி.மு.க.வில் மாநில அளவிலான பதவி வேண்டும் என்று மு.க. அழகிரி கேட்பதாகவும், இது குறித்து பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பது பற்றி ஆலோசனை நடத்த தி.மு.க.வின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.

தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரிக்கு மீண்டும் பதவி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் ஏற்கனவே கட்சி பொறுப்பில் இருந்தும் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மீண்டும் கட்சி பொறுப்பு வழங்க வேண்டும் என்று தி.மு.க.வின் ஒரு பிரிவினர் விரும்புகிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு போல தி.மு.க.வில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று தி.மு.க. மேலிடத் தலைவர்களும், கருணாநிதியின் குடும்பத்தினரும் விரும்புகிறார்கள்.

அதனால் மு.க.அழகிரியை மீண்டும் கட்சி பணிக்கு கொண்டு வரவும், அவருக்கு ஏற்கனவே வழங்கிய தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை மீண்டும் கொடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறார்கள்.


ஆனால் மு.க.அழகிரி அந்த பொறுப்பை பெற விரும்பவில்லை என்றும், மாநில அளவிலான பதவி வேண்டும் என்று கேட்பதாகவும் தெரிகிறது.

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அனைத்து பொறுப்புகளிலும் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களின் பிரச்சனைகளை நேரடியாக ஆய்வு நடத்தும் அதிகாரம் இருந்தால் தான் தனக்கு கவுரவமாக இருக்கும் என்று அவர் விரும்புவதாக தெரிகிறது.

இந்த பொறுப்பை வழங்கினால் விரைவில் வர உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் முன்னின்று எடுக்க தயாராக இருப்பதாக மு.க.அழகிரி தரப்பில் கூறப்படுகிறது.

மு.க.அழகிரியின் விருப்பம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மு.க.அழகிரி ஒதுங்கி இருக்காமல் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். அதற்குரிய பதவி அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கருணாநிதியின் குடும்பத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனால் மு.க.அழகிரிக்கு விரைவில் பதவி வழங்கப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

இது குறித்து செயற்குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டாலும் பொதுக்குழுவில் தான் இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கிறது.- Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!