கலைஞரின் மறைவால் களை இழந்த கோபாலபுரம் இல்லம்..!


கருணாநிதி உயிருடன் இல்லாததால் அவரது வீட்டு முன்பு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பும், இசட்பிளஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான பரபரப்பு இன்றி கோபாலபுரம் இல்லம் களை இழந்து காணப்படுகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வசித்து வந்த கோபாலபுரம் இல்லம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். இசட்பிளஸ் பாதுகாப்பு பிரிவின் கீழ் அவர் இருந்ததால் கமாண்டோ படையினர் எப்போதும் வீட்டு முன்பு பாதுகாப்பில் ஈடுபட்டு இருப்பார்கள்.

மாநில போலீசாரும் கோபாலபுரம் வீட்டு முன்பு குவிந்திருப்பார்கள். தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கருணாநிதியை பார்ப்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் வருவது வழக்கம்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் ஓய்வில் இருந்த போதும் கோபாலபுரம் இல்லத்திலேயே கருணாநிதி இருந்தார். வெளி ஆட்கள் பெருமளவில் சந்திப்பதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கோபாலபுரம் இல்லத்திலேயே கருணாநிதிக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவரை கவனித்து வந்தனர். கருணாநிதி காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 11 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த 7-ந்தேதி உயிரிழந்தார்.

அவரது உடல் கோபாலபுரம் இல்லத்திலேயே முதலில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. தி.மு.க.வினர் திரளாக திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். தற்போது கருணாநிதி உயிருடன் இல்லாததால் அவரது வீட்டு முன்பு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பும், இசட்பிளஸ் பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான பரபரப்பு இன்றி கோபாலபுரம் இல்லம் களை இழந்து காணப்படுகிறது. கருணாநிதி இல்லாத சோகம் அந்த பகுதியில் நிலவுகிறது.

இன்று காலை கோபாலபுரம் இல்லத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். டி.ஆர்.பாலு, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வீட்டில் இருந்தனர். இன்று 2-வது நாளாக மு.க.ஸ்டாலினை முக்கிய பிரமுகர்கள் பலர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

ஆற்காடு நவாப், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பாடகர் மாணிக்க விநாயகம், நடிகர் சின்னிஜெயந்த் ஆகியோரும் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். கிறிஸ்தவ பாதிரியார்கள் பலரும் மு.க.ஸ்டாலினை சந்தித்து துக்கம் விசாரித்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!