அரசியல் போராட்ட களத்தில் கலைஞரின் அழிக்க முடியாத வரலாற்று பதிவுகள்…!


கருணாநிதியின் அரசியல் போராட்ட களத்தில் அழிக்க முடியாத வரலாற்று பதிவுகள் இடம்பெற்று உள்ளது.

திராவிட இயக்கங்களின் தந்தை என போற்றப்படும் பெரியார் திருச்சியை மையமாக வைத்து தான் இயக்கத்தை நடத்தினார். திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து 1949-ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகம் சென்னை ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் உதயமாகி இருந்தாலும் பெரியார் வழியில் திருச்சியை மையமாக வைத்தே முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தி.மு.க.வின் முதல் மாநில மாநாடு சென்னையில் நடந்து இருந்தாலும் தி.மு.க. தேர்தல் பாதையில் பயணிப்பதற்கான முக்கிய முடிவினை எடுத்தது திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில் தான்.

அண்ணாவின் மறைவுக்கு பின்னர் தனது இறுதி மூச்சு அடங்கும் வரை ஐம்பதாண்டு காலம் தி.மு.க.வின் தலைவராக இருந்த கருணாநிதி பொதுவாழ்வில் அரசியல் போராட்டத்திற்கு களம் அமைத்து கொடுத்ததும் திருச்சி தான். திருச்சி மாவட்டம் கல்லக்குடி ரெயில் நிலையத்திற்கு டால்மியாபுரம் என சூட்டப்பட்டிருந்த பெயரை மாற்றக்கோரி அண்ணாவின் உத்தரவுபடி கருணாநிதி நடத்திய முதல் போராட்டம் தான் அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

1953-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந்தேதி காலை 9 மணி அளவில் கல்லக்குடி ரெயில் நிலையத்திற்குள் புகுந்த கருணாநிதி அங்கு டால்மியாபுரம் என்ற பெயர் பலகையின் மேல் கல்லக்குடி என்ற சுவரொட்டியை ஒட்டினார். பின்னர் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தினார்.

தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து போராட்டம் நடத்தியதற்காக ரெயில்வே போலீசார் கருணாநிதி உள்பட 34 பேரை கைது செய்து அரியலூர் வருவாய் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்த வழக்கில் கருணாநிதிக்கு 5 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும், 35 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோர்ட்டு தீர்ப்பினை தொடர்ந்து முதலில் அரியலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்ட கருணாநிதி பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.


1957-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் கருணாநிதி அப்போது ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். கருணாநிதியின் முதல் சட்டமன்ற தேர்தல் வெற்றி இதில் இருந்து தான் தொடங்கியது. குளித்தலையில் பெற்ற வெற்றியின் மூலம் சட்டமன்றத்திற்குள் அடி எடுத்து வைத்த கருணாநிதி குளித்தலை பகுதியை சேர்ந்த நங்கவரம் என்ற ஊரில் நில உரிமையாளர்களான பண்ணையார்களின் பிடியில் சிக்கிய விவசாய தொழிலாளர்கள் உரிய கூலி பெற முடியாமலும், குத்தகை உரிமை பெற முடியாமலும் தவித்து வந்ததை தனது சட்டமன்ற கன்னி பேச்சில் குறிப்பிட்டார்.சட்டமன்றத்தில் பேசியதோடு நிறுத்தி கொள்ளாமல் நங்கவரம் பகுதிக்கே வந்து பண்ணையார்களுக்கு எதிராக விவசாய தொழிலாளர்களை திரட்டி நேரடி போராட்டத்தில் களம் இறங்கினார்.

20 நாட்கள் முகாமிட்டு போராட்டம் நடத்தினார். அப்போது கம்யூனிஸ்டு கட்சியினரும் எம்.கே.கல்யாண சுந்தரம் தலைமையில் இதே பிரச்சினைக்காக போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களின் விளைவாக விவசாய தொழிலாளர்களுக்கு பாரம்பரிய குத்தகை உரிமை கிடைத்தது. எத்தனையோ போராட்டங்களில் கலந்து கொண்டு கருணாநிதி சிறை சென்றிருந்தாலும் திருச்சி பகுதியில் நடைபெற்ற மாநாடு மற்றும் தி.மு.க. பொதுக்கூட்டங்களில் அவருக்கே உரிய சொல் நயத்துடன் நாடு பாதி நங்கவரம் பண்ணை பாதி என தொடங்கி நங்கவரம் போராட்டம் பற்றி கருணாநிதி குறிப்பிட தவறியது இல்லை.

நங்கவரம் போராட்ட களத்தில் கருணாநிதியுடன் பங்கேற்ற கவுண்டம்பட்டிமுத்து (வயது 92) என்பவர் நிருபரிடம் கூறுகையில் ‘கருணாநிதி முதன் முதலில் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்றதற்கு அவரது கடும் உழைப்பே காரணம். அப்போது திருச்சி மாவட்ட செயலாளராக இருந்த மறைந்த அன்பில் தர்மலிங்கம் மற்றும் கழகத்தினர் சாதி, மதம் பாகுபாடு


இன்றி கம்புச்சோறு, நீராகாரம் சாப்பிட்டு வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தோம். கருணாநிதி இரவு நேரத்திலும் ஓய்வு இல்லாமல் அரிக்கேன் விளக்கு மூலம் ஓட்டு சேகரிக்க செல்வார். முகம் நன்றாக தெரிவதற்கு விளக்கை கூடையில் வைத்து கருணாநிதி முகம் முன்பு காண்பித்து ஓட்டு சேகரித்தது மறக்க முடியாத நிகழ்வு. அப்போது மக்களை பார்த்து நான் வெற்றி பெற்றால் தெருவிளக்குகள், அனைத்து குடிசைகளுக்கும் மின் இணைப்பு செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்தார். வெற்றிபெற்ற பின்னர் குளித்தலை தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்’ என்றார்.

1965-ம் ஆண்டு விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் கருணாநிதி கரூரில் கலந்து கொண்டு கைதான போது அடைக்கப்பட்டதும் திருச்சி மத்திய சிறையில் தான். தி.மு.க.வின் பத்தாவது மாநில மாநாடு கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதுவே தி.மு.க. மாநில மாநாட்டில் அவர் ஆற்றிய இறுதி உரையாகும். தி.மு.க.வின் பத்து மாநாடுகளில் ஐந்து மாநாடுகள் திருச்சியில் தான் நடத்தப்பட்டு உள்ளன. இதில் 1990-ம் ஆண்டு திருச்சியில் நடந்த ஆறாவது தி.மு.க. மாநாட்டிற்கு கருணாநிதி திருப்புமுனை மாநாடு என பெயர் சூட்டி இருந்தார்.

இப்படி தமிழகத்தின் மைய பகுதியான திருச்சியை மையப்படுத்தியே கருணாநிதி பல மாநாடுகளையும், போராட்டங்களையும் நடத்தி உள்ளார். இந்த போராட்டங்கள் அவரது அரசியல் வாழ்வில் அழிக்க முடியாத வரலாற்று பதிவுகளை ஏற்படுத்தி உள்ளன என்று சொன்னால் மிகையாகாது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!