நான் தான் கணவரை கொலை செய்தேன்… விரக்தியடைந்த பெண்ணின் குமுறல்…!


தர்மபுரி, காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்கோவிந்த ராஜ். இவரது மகன் கவியரசு (வயது 42). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

இவருக்கும், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பெரிய சோரகை பகுதியை சேர்ந்த பழனிசாமியின் மகள் லெட்சுமி என்பவருக்கும் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிர்த்தி(17) என்ற மகளும், கரண்(15) என்ற மகனும் உள்ளனர்.

கவியரசு குடும்பத்துடன் மனைவி வீட்டிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில் ஊரில் அவரது தந்தை பால் கோவிந்தராஜ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் கவியரசு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு தனது சொந்த ஊருக்கே திரும்பி வந்தார்.

ஊருக்கு வந்தது முதல் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த கருத்து வேறுபாடு காரணமாக லெட்சுமி கணவர் கவியரசை விட்டு பிரிந்து தனது மகளை அழைத்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கே திரும்பி வந்து விட்டார். கவியரசு தனது மகனுடன் காமாட்சி அம்மன் கோவில் தெருவிலேயே வசித்து வந்தார்.

இவருடைய பைனான்ஸ் நிறுவனம் தர்மபுரி, கவுஸ் தெருவில் உள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் பல பேருக்கு வட்டிக்கு பணம் விட்டிருந்தார். இதற்கிடையே காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் மல்லிகா என்ற பெண் கலெக்டர் அலுவலகம் அருகில் ஓட்டல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த ஓட்டலை நடத்துவதற்காக கவியரசுவிடம் இருந்து வட்டிக்கு பணம் கடன் வாங்கியிருந்தார். இந்த வட்டி பணத்தை வசூல் செய்வதற்காக கவியரசு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் தினமும் அந்த ஓட்டல் கடைக்கு செல்வது வழக்கம். அப்போது அங்கு மல்லிகாவின் மகள் நிர்மலா(23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

உடனே மல்லிகாவிடம் உங்களது மகள் நிர்மலாவை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள். எனது முதல் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனவே, 2-வது தாரமாக நிர்மலாவை கட்டிக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார். ஏழ்மையான நிலையில் இருந்த நிர்மலாவின் பெற்றோர் கவியரசு வசதியாக இருப்பதால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செம்மனஅள்ளி பெருமாள் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 2-வது மனைவி நிர்மலாவுடன் குடும்பம் நடத்தி வந்த கவியரசு திடீரென மாயமானார்.


இது குறித்து அவருடைய தாய் விஜயா அளித்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நிர்மலா அதியமான் கோட்டை, ஏ.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த தனது கள்ளக்காதலன் எம்.இ. பட்டதாரியான அபினேஷ் மற்றும் கூலிப்படையை ஏவி அவரை கொலை செய்து உடலை குண்டல்பட்டி- மல்லிகுட்டை சாலையில் நல்லாண்டி அள்ளியில் உள்ள காலியிடத்தில் புதைத்திருப்பது இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நிர்மலாவையும், அவருடைய கள்ளக்காதலன் அபினேசையும் பிடித்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது நிர்மலா போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:- ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த நான், பி.இ. படித்துள்ளேன். எனது அம்மா தர்மபுரி கலெக்ட் ரேட் அலுவலகம் அருகே சிறிய மெஸ் ஒன்றை நடத்தி வருகிறார். எனது தாயிக்கு உதவியாக அந்த ஓட்டல் கடையில் இருப்பேன்.

இந்த ஓட்டலை நடத்துவதற்காக அவ்வபோது எனது தாய் வட்டிக்கு பணம் கவியரசுவிடம் இருந்து வாங்கியிருந்தார். அப்போது பணம் வசூல் செய்ய வந்த கவியரசு, ஓட்டலில் இருந்த என்னை பார்த்ததும் என்னை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். இது பற்றி அவர் என்னிடம் வந்து தெரிவித்தபோது நான் மறுத்தேன்.

தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தபோது ஏ.கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த அபினேஷ்(27) என்பவரை காதலித்ததாகவும், தொடர்ந்து நாங்கள் 4 வருடங்களாக காதலித்து வருவதாகவும் கூறினேன். எனினும் அவர், எனது பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டார்.

உடனே நான் எனது காதலர் அபினேஷிடம் இது பற்றி தெரிவித்து எனக்கும், கவியரசுக்கும் விரைவில் பெற்றோர் திருமணம் செய்து வைக்க உள்ளனர். எப்படியாவது தடுத்து விடு என்றேன். அப்போது அவரும் கவியரசுவை திருமணம் செய்துவிடாதே, நான் அவரிடம் இது பற்றி பேசி திருமணத்தை நிறுத்தி விடுகிறேன் என கூறினார்.

அதன்படி அபினேஷ், கவியரசுவிடம் சென்று நிர்மலாவை நான் 4 வருடங்களாக காதலிக்கிறேன். நீ அவளை திருமணம் செய்யக்கூடாது. அதனை மீறி திருமணம் செய்தால் பெரிய விளைவுகள் ஏற்படும் என எச்சரித்தார். அப்போது அபினேசை கவியரசு அடித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் அவர் இருந்தார்.

இந்த நிலையில் எனது சம்மத்தை மீறி பெற்றோர் வலுக்கட்டாயமாக கவியரசுவுடன் திருமணம் செய்து வைத்து விட்டனர். அதே நேரத்தில் அபினேசுக்கும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணம் ஆன பிறகு கவியரசு அதீத சக்தி கொண்ட மாத்திரைகளை சாப்பிட்டு கொண்டு என்னிடம் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டார்.

மேலும் இது போல் அடிக்கடி செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்தார். நான் பல முறை மறுத்தபோதும் என்னை விடவில்லை. ஒரு கட்டத்தில் அவரது செக்ஸ் தொல்லை அதிகரிக்கவே நான் விரக்தி அடைந்தேன். இதனால் அழுது புரண்ட நான், காதலன் அபினேசுவிடம் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதேன். சின்ன பொண்ணு என்றும் தெரிந்தும் கவியரசு என்னை விடவில்லை என அழுது புலம்பினேன்.


எனது மன வேதனையை புரிந்த அபினேஷ் நேராக சென்று இது பற்றி கூறி கவியரசுவிடம் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கவியரசு தனது நண்பர்களுடன் சேர்ந்து மீண்டும் அவரை அடித்து உதைத்தார். மேலும் நிர்மலாவையும் அடித்து உதைத்துள்ளார். இதனால் எனது கணவனை கொலை செய்ய காதலனுடன் நான் திட்டம் தீட்டினேன்.

இந்த திட்டம் கடந்த 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை வகுக்கப்பட்டது. இதற்காக ரூ.1 லட்சம் வரை பேரம் பேசி முதற்கட்டமாக ரூ.55 ஆயிரத்தை அபினேசிடம் கொடுத்தேன். மீதமுள்ள தொகையை கவியரசை தீர்த்துக்கட்டிய பிறகு தருகிறேன். எப்படியாவது அவருடைய கதையை முடித்து விடு என்றேன்.

அதன்படி அபினேஷ் தர்மபுரி நியூ காலனி, கோல்டன் தெருவை சேர்ந்த அடியாட்களை வைத்தும், கூலிப்படையினரை வைத்தும் கடந்த 14-ந்தேதி இரவு 10.15 மணி அளவில் பைனான்ஸ் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த கவியரசுவை காரில் கடத்தினார்கள். கடத்தி செல்வதை யாரும் பார்த்து விடாமல் இருக்கவும், அவர் சத்தம் போட்டு விடாமல் இருக்கவும் காருக்குள் வைத்து அவருடைய கழுத்தையும் வாய் பகுதியையும் டேப்பால் இறுக்கமாக சுற்றினார்கள்.

மேலும் அசையாமல் இருக்க கை,கால்களையும் டேப்பினால் இறுக்கமாக சுற்றினார்கள். பின்னர் இழுத்தை இறுக்கினார்கள். இதில் பாதி உயிருடன் இருந்த அவரை நேராக குண்டல்பட்டி-மல்லிகுட்டை சாலையில் நல்லாண்டி அள்ளியில் உள்ள காலியிடத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்த கொலையை மறைப்பதற்காக கூலிப்படையை சேர்ந்த ஒருவர் கவியரசு மோட்டார் சைக்கிளை காரின் பின்னால் ஓட்டிக் கொண்டே வந்தார். நல்லாண்டி அள்ளியில் உள்ள காலியிடத்திற்கு கவியரசுவை கொண்டு சென்றதும், அங்கு ஏற்கனவே நிறுத்தி இருந்த ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் குழி தோண்டி வைக்கப்பட்டு இருக்கிறது.

பின்னர் ஜே.சி.பி. டிரைவரிடம், சிறிது நேரம் கழித்து வரும்படி தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு காரில் இருந்து தூக்கி கொண்டு வந்து அந்த குழிக்குள் போட்டனர். பாதி உயிர் இருந்த நிலையில், அவருடைய தலையில் பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டனர். பின்னர் உயிருடன் அவரை உள்ளே வைத்து மண்ணை அள்ளி போட்டார்கள்.

இதையடுத்து ஜே.சி.பி. டிரைவரை வரவழைத்து குழிக்குள் மண் முழுவதும் கொட்டப்பட்டு, குழி மூடப்பட்டது. கவியரசுவை உயிருடன் சமாதி கட்டிய பிறகு அபினேஷ் மற்றும் கூலிப்படையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள். என்னுடன் பேசுவதை அபினேஷ் கடந்த 9-ந்தேதி முதல் நிறுத்தினார். எனினும் பழைய செல்போன் உரையாடல் வைத்தும், எங்களுடைய நடத்தையை கண்காணித்தும் கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு நிர்மலா வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து கவியரசு உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கள்ளக்காதலன் அபினேஷ் மற்றும் நிர்மலா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுடைய அடியாட்களையும், கூலிப்படையினரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!