கைவிட்ட பிள்ளைகள் – தங்களுக்கான சவக்குழியைத் தோண்டிய பெற்றோரால் பரபரப்பு…!


கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே வயதான பெற்றோர்களை பிள்ளைகள் கவனிக்காமல் கைவிட்டதால் முதியவர்கள் இருவரும் தனக்குதானே சவக்குழி தோண்டிய சம்பவம் நடந்தேறியுள்ளது.

கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பரதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சாரங்கபாணி. இவருடைய தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு வெளியூர் சென்றுவிட்டார். மகன் பரதம்பட்டிலேயே, திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

வயதான தம்பதிகளான சாரங்கபாணி – தனலட்சுமி மகளும் மகனும் அவர்களை கவனிக்காததால், சாப்பாட்டுக்கே திண்டாடி வந்துள்ளனர். மகனிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லாததால் முதியவர்கள் இருவரும் விரக்தியில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், சாரங்கபானி – தனலட்சுமி இருவரும் தனது வீட்டின் அருகே தங்களுக்குத் தாங்களே சவக்குழி தோண்டியதோடு, , உறவினர்களுக்கு போன் செய்து இருவரும் தற்கொலை செய்துகொள்ள இருப்பதாகவும் அவகள் உடலை அந்த சவக்குழியில் புதைத்துவிட வேண்டும் என்றும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. வயதான பெற்றோர்கள் மகன் கவனிக்காததால், தங்களுக்குத் தாங்களே சவக்குழி தோண்டிக்கொண்ட சம்பவம் பரவலாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும், அவர்கள், நெய்வேலி நிறுவனத்துக்கு நிலத்தைக் கொடுத்ததற்கு இன்னும் பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீஸார் அந்த முதியவர்களை சந்தித்து விசாரித்தனர். பின்னர், முதிய பெற்றோர்களிடமும் அவர்களுடைய மகனிடமும் பேசி பிரச்சனையை சரி செய்துள்ளனர்.

இது தொடர்பாக, குறிஞ்சிப்பாடி போலீஸார் நம்மிடம் கூறுகையில், “நீங்கள் சொல்வது போல, முதியவர்கள் தங்களுக்குத் தாங்களே சவக்குழி எதுவும் தோண்டவில்லை. நாங்கள் நேரில் சென்று விசாரித்தோம். வயதான பெற்றோர்களை அவர்களுடைய மகன் கவனிப்பதில்லை.

சாப்பாடு போடுவதில்லை என்ற பிரச்சனை இருந்துள்ளது. இது தொடர்பாக மகனிடம் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பெரியவரிடம் ஏன் சவக்குழி தோண்டினீர்கள் என்று கேட்டதற்கு குப்பைகளைக் கொட்டுவதற்காக குழி தோண்டினேன் என்று கூறுகிறார்.

மகனிடம் கேட்டதற்கு, நிலம் இருக்கிறது. அதைகூட அவருடைய வயதான அப்பா விற்பனை செய்து அதில் வரும் பணத்தை வைத்து அவரகளைப் பார்த்துக்கொள்ளட்டும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறுகிறார். மற்றபடி, அவர்கள் நெய்வேலி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தது பற்றி எதுவும் தகவல் இல்லை” என்று போலீஸார் தெரிவித்தனர்.

வயதான பெற்றோர்களை கவனிக்கத் தவறியதால், முதிய பெற்றோர்கள் தங்களுக்குத் தாங்களே சவக்குழி தோண்டிக்கொண்டதாக செய்தி பரவலானதால் குறிஞ்சிப்பாடி பகுதி பரபரப்புடன் இருந்தது.-Source: tamil.oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!