பாலி, லாம்போக் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் – 82 பேர் பரிதாபமாக பலி…!


இந்தோனேசியாவின் பாலி, லாம்போக் தீவுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

17 ஆயிரத்துக்கும் அதிகமான தீவுகளைக் கொண்ட ஆசிய நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்க்கும் அந்நாட்டின் பாலி மற்றும் லாம்போக் தீவுகளில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதன் தாக்கம் கிழக்கு மற்றும் வடக்கு பாலி, கிழக்கு ஜாவா, தென்கிழக்கு மடுரா, தெற்கு கலிமண்டன், தெற்கு சுலவேசி ஆகிய இதர பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பல வினாடிகள் நேரம் வரை நீடித்தது.

இதனால் கடலோர பகுதிகளில் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்தன.

கடலுக்கு அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசிய அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுத்தது.

மக்கள் அனைவரும் உடனே மேடான பகுதிக்கு விரைந்து செல்லுங்கள். யாரும் அச்சம் கொள்ளவேண்டாம். நிலைமை இயல்பாகும்வரை அமைதியாக இருங்கள் என்று இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது. எனினும் கடல் அலைகள் எதிர்பார்த்த அளவிற்கு எழாததால் சில மணி நேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலியாகியுள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!