சாக்குப்பையில் கல்லுடன் தாய் மற்றும் 3 மகன்களின் உடல்கள் கிடந்ததால் பரபரப்பு…!


தருமபுரியில் தாய் மற்றும் மூன்று மகன்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். நால்வரின் உடல்களும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. தாயின் உடல் கல்லுடன் சாக்குப்பையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேவுள்ள சௌளுக்கொட்டாயைச் சேர்ந்தவர் லோகநாதன். கட்டிட மேஸ்திரியான இவருக்கு நதியா என்ற மனைவியும், சஞ்சய், பூவரசன், நிர்மல் என்ற மகன்களும் இருந்தனர்.

சென்னம்பட்டி அரசு பள்ளியில் சஞ்சய் 7-ஆம் வகுப்பும், சின்னாத்துப்பள்ளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பூவரசன் 3-ஆம் வகுப்பும், இதேப் பள்ளியில் நிர்மல் ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 27-ஆம் தேதி நதியா, தனது மகன்களுடன் வீட்டில் இருந்து திடிரென மாயமானார். இதுகுறித்து நதியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தும் நதியா கிடைக்கவில்லை. இதனால் அவர்கள், காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக நதியாவின் கணவர் லோகநாதனிடம் காவலாளர்கள் விசாராணை நடத்தினர்.

இந்நிலையில், நேற்று காலை லோகநாதனின் தந்தை வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் இரண்டு சிறுவர்களின் உடல் தண்ணீரில் மிதப்பதை பார்த்தவர்கள் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்தனர் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் மற்றும் காவலாளர்கள்.

கிணற்றில் படிக்கட்டுகள் இல்லாததால் சிறுவர்களை மீட்க தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் கயிற்றை கட்டி கொண்டு கிணற்றில் இறங்கி சிறுவர்கள் இருவரையும் மீட்டனர். அவர்கள் மாயமான நதியாவின் மகன்களான சஞ்சய் மற்றும் பூவரசன் என்பது தெரியவந்தது.

இதனால் உள்ளே நதியாவும், நிர்மலும் இருக்கலாம் என்று எண்ணி தீயணைப்பு வீரர்களை தேட சொன்னார்கள். அப்போது தண்ணீரில் இருந்து நதியா மற்றும் நிர்மலின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். நதியா, நிர்மலை துணியால் தனது மார்போடு கட்டியபடி சாக்குப்பையில் கிடந்தார்.

மீட்கப்பட்ட நால்வரின் வாய்களும் துணியால் கட்டப்பட்டு இருந்தது. நதியா மற்றும் நிர்மல் கால்களில் கல் கட்டப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கதறி அழுதனர்.

பின்னர், இதுகுறித்து தருமபுரி காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கண்காணிப்பாளர் நால்வரின் உடல்களையும் பார்வையிட்டு பின்னர் உடற்கூராய்வுக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

நதியா மற்றும் மூன்று மகன்களின் வாய்கள் துணியால் கட்டப்பட்டு இருந்தது. நதியாவின் உடல் சாக்குப்படை ஒன்றில் கல்லுடன் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. இதனால் இது கொலையாக இருக்குமோ? என்ற கோணத்தில் காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்பேரில் நதியாவின் கணவர் லோகநாதன் மற்றும் அவரது தந்தை சண்முகம், தாய் தேவகி ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவலாளர்கள் தீவிரமாக விசாராணை நடத்தி வருகின்றனர்.

தாய் மற்றும் மூன்று மகன்கள் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவ இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!