கற்பழிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்திய பாதிரியாரால் வெடித்தது சர்ச்சை…!


கேரள மாநிலம் மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபை நிர்வாகத்திடம் இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த மாதம் புகார் செய்தார். அப்போது, அவருக்கும், நிர்வாகிக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜோப் மேத்யூ மற்றும் ஜாய்ஸ் கே ஜார்ஜ் உள்பட 4 பாதிரியார்கள் மீது கேரள போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர்.உடனடியாக ஆப்ரகாம் வர்கீஸ், ஜோப் மேத்யூ, ஜாய்ஸ் கே ஜார்ஜ் ஆகிய 3 பேரும் இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டை அணுகினர்.

ஆனால் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்.இந்த நிலையில் பாதிரியார் ஜோப் மேத்யூ, கொல்லம் மாவட்டத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், மற்ற 2 பாதிரியார்களும் தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஆப்ரகாம் வர்கீஸ் , புகார் அளித்த பெண், அவர் வேலை செய்துவரும் பள்ளியின் பெயர், அந்தப் பெண்ணின் கணவர் பெயர், அவர்கள் வசிக்கும் இடம் உள்ளிட்ட பல தகவல்களை வெளிப்படையாகத் தந்து யூடியூப் வீடியோவில் தெரிவித்து இருந்தார் . பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இது அமைந்ததால் சர்ச்சை எழுந்த நிலையில்,வீடியோ உடனடியாக யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது.

மேலும்,எனக்கு எதிராக, அந்தப் பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. நான் எதுவுமறியாதவன் என்பதை விரைவில் நிரூபிப்பேன்” என்று வீடியோவில் பேசியிருந்தார். இதன் மூலமாக, சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளம் வெளிப்படையாகத் தெரிய வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அந்தப் பெண்ணின் கணவர், ஆப்ரகாம் வர்கீஸ் செய்த செயல் வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளார். “சம்பந்தப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தி, மனிதத்தன்மையற்ற செயலைச் செய்துள்ளார் பாதிரியார் வர்கீஸ். பெண்ணின் தாயையும் அவமானப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், அவருக்கு எதிராகச் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!