விளம்பர படத்திற்கு தடை.. மகளுடன் புதிய சர்ச்சையில் சிக்கிய அமிதாப்பச்சன்..!


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அவரது மகள், சுவேதாவுடன் இணைந்து விளம்பர படமொன்றில் நடித்துள்ளார். இவர் மகளுடன் நடித்த முதல் படம் என்பதால் இதற்கு பெரிய வரவேற்பு இருந்தது. அமிதாப்பச்சனும் மகளுடன் நடித்ததை பெருமையாக பேசி வந்தார். இந்நிலையில் இந்த விளம்பரத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த விளம்பர படத்தில் அமிதாப்பச்சன் மகளுடன் வங்கி ஒன்றுக்கு சென்று பென்ஷன் தொடர்பாக பேச முற்படுகிறார். உடனே வங்கி ஊழியர்கள் எரிச்சல்பட்டு பாஸ்புக்கை தள்ளிவிடுகிறார்கள். பிறகு ஒவ்வொரு கவுண்ட்டராக சென்றும் அவருக்கு அதே அனுபவம் ஏற்படுகிறது. இறுதியாக மகளுடன் வங்கி மேலாளரை சந்திக்கிறார் அமிதாப்.

தனக்கு ஒரு மாதத்தில் இரண்டு முறை பென்ஷன் ‘கிரடிட்’ ஆகிவிட்டது என்று கூறுகிறார். அதை கேட்டதும் மேலாளர் இதற்கு நீங்கள் விருந்து தான் வைக்க வேண்டும் என்கிறார். ஆனால் இப்படி ஏமாற்றி பணம் சேர்ப்பது தனது கொள்கைக்கு விரோதமானது என்கிறார் அமிதாப்பச்சன். அதை கேட்டதும் அதிர்ச்சியாகிறார் மேலாளர். இப்படி ஒன்றரை நிமிடம் இந்த விளம்பரம் ஒளிபரப்பாகிறது.

இந்த காட்சியைத்தான் வங்கி ஊழியர்கள் எதிர்த்து உள்ளனர். இதுகுறித்து அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு செயலாளர் சவும்யா தத்தா கூறும்பொது, ‘ஏற்கனவே வங்கிகள் மீது பல்வேறு காரணங்களால் மக்களுக்கு தவறான எண்ணம் உள்ளது. இந்த விளம்பரம் மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்துவதுபோல் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் சேவைதான் எங்கள் முதல் நோக்கம்” என்று கூறியுள்ளார். விளம்பரத்தை நீக்காவிட்டால் வழக்கு தொடருவோம். போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளர். இதனால் புது சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமிதாப்பச்சன்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!