கணவனை சும்மா விட்றாதீங்க… டெல்லியில் விமான பணிப்பெண் தற்கொலை…?


வரதட்சணை கொடுமையால் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ஏர்ஹோஸ்டஸ் அதற்கு முன் கணவனை சும்மா விட்றாதீங்க.. என சகோதரருக்கு செல்போனில் தகவல் அனுப்பியுள்ளார்.

ஜெர்மன் ஏர்லைன்சில் விமானப் பணிப்பெண்ணாக இருந்த அனுசியா பத்ராவுக்கும், டெல்லி ஹவுஸ்ஹாஸ் பகுதியில் உள்ள பஞ்சீல் ஏரியாவைச் சேர்ந்த மயங்க் பத்ராவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தது. போதைக்கு அடிமையான மயங்க் பத்ரா, திருமணமாகி சில மாதங்களிலேயே வேலையைக் காட்டத் தொடங்கினார். வேலைக்குச் செல்லாமல் எப்போதும் போதையிலேயே உலாவிய அவர், மனைவியின் சம்பளம் மொத்தத்தையும் போதைப் பொருட்களுக்காகவே செலவழித்தார்.

இதனால், கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வந்தது. கூடவே கடனும் அதிகரித்ததால், அனுசியா பத்ரா பெயரில் இருந்த ஒரு அடுக்கு மாடி வீட்டை கடந்த மாதம் விற்றனர். அந்த பணத்தை வைத்து கடனை அடைக்கலாம் என அனுசியா நினைத்த நேரத்தில் அதில் பெருந்தொகையை தன் செலவுக்காக தர வேண்டும் என்று மயங்க் பத்ரா சண்டை போட்டார்.

ஆனால், அதற்கு மறுத்துவிட்டதால், தாய் வீட்டில் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி, அனுசியாவை கடுமையாக தாக்கினார். இதையடுத்து, காவல்நிலையத்தில் அனுசியா புகார் அளித்தார். காவல்துறையினரும் மயங்க் பத்ராவை அழைத்து கண்டித்து அனுப்பினர்.

இதையடுத்து வீட்டுக்கு வந்த அனுசியாவை மீண்டும் கடுமையாக தாக்கிய மயங்க் பத்ரா, ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு, வெளியே சென்றுவிட்டார். இதையடுத்து, தன் நிலையை, ஒரு தோழியிடம் வாட்ஸ்ஆப் மூலம் கூறி கதறியுள்ளார் அனுசியா. சிறிதுநேரத்தில் மீண்டும் வந்த மயங்க் பத்ரா, அனுசியா அழைத்து சமாதானம் பேசி, சந்தோசமாக இருந்துள்ளார்.


மறுநாள் மீண்டும் வழக்கம்போல, வரதட்சணை பிரச்சனையை மயங்க் கிளப்பியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போதும் அனுசியாவை கடுமையாக தாக்கிவிட்டு, மயங்க் வெளியே சென்றுவிட்டார். இதையடுத்து, தனது சகோதருக்கு வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பிய அனுசியா, தனது கணவரை சும்மா விட்டு விடாதீர்கள்… போலீசில் புகார் கொடுங்கள் எனக் கூறியுள்ளார்.

அடுத்த சில நொடிகளில் தனது கணவரின் செல்போனுக்கு, நான் இறுதி முடிவை எடுக்கப்போகிறேன் என தகவல் அனுப்பிவிட்டு, மொட்டை மாடிக்குச் சென்ற அனுசியா, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அனுசியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இதனிடையே, தங்களது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ள அனுசியாவின் பெற்றோர், மயங்க் பத்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஏற்கெனவே அனுசியா வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கேட்டு மயங்க் அடிக்கடி சண்டை போட்டதால், அந்த வங்கிக் கணக்கையும் முடக்கிய காவல்துறையினர், அனுசியா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கோணத்திலும் மயங்கிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!