அட கடவுளே! அழிந்து கொண்டிருக்கும் இளையதலைமுறை..! பெற்றோர்களே உஷார்!


சமீபத்தில், நான் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். நகர்ப்புறத்ததைத் தாண்டிய பகுதி அது. அப்போது, எதிர் சாலையில் வந்த சிட்டி பஸ் நின்றது

சமீபத்தில், நான் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். நகர்ப்புறத்ததைத் தாண்டிய பகுதி அது. அப்போது, எதிர் சாலையில் வந்த சிட்டி பஸ் நின்றது. அதிலிருந்து இறங்கிய பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பள்ளிக்கூட யூனிபார்முடன் அந்த நிறுத்தத்தில் இறங்கி, வேகமாக சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.

நானும், அவர்களைக் கண்டவுடன், என் வண்டியை பிரேக் பிடித்து நிப்பாட்டினேன். அந்த மாணவர்களைச் சற்று உற்றுக் கவனித்தேன். பால் வடியும் முகங்கள்! பத்தாம் வகுப்பு கூட இருக்காது போலிருந்தது. இத்தனை பேர், இவ்வளவு ஆர்வமாகவும் வேகமாகவும் எங்கே போகிறார்கள்? என்று காண எனக்குள் ஏற்பட்ட ஆர்வத்தை அடக்க இயலாமல், என் வண்டியை சாலையோரம் நிறுத்தி விட்டு, அவர்கள் அறியா வண்ணம் அவர்களைப் பின் தொடர்ந்தேன்.

அது ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம் என்பதால், அவர்களைத் தவிர ஆள் அரவம் இல்லை. அந்த மாணவர்கள், சிறு குடிசை போன்ற இடத்திற்கு வெளியே நின்றனர். அந்த மாணவர்களில் ஒருவன் மட்டும் அந்தக் குடிசைக்குள் நுழைந்தான். மற்றவர்கள், வெளியே நின்றிருந்தனர்.

ஏதோ, என் மனதிற்குள் வித்தியாசமாகப்பட, அவர்கள் அறியாமல், அருகில் இருந்த மரத்தின் பின்னால் இருந்து, நடப்பதைக் கண்காணிக்கத் துவங்கினேன். குடிசையின் உள்ளேயிருந்து 40 வயதைத் தாண்டிய கிராமப் பெண் ஒருத்தி வெளியே வந்தாள். பிறகு, அவர்களை, அந்தக் குடிசையைத் தாண்டி ஓரத்திற்கு அழைத்துச் சென்றாள்.


பின், தன் இடுப்பில் செருகி வைத்திருந்த சுருக்குப் பையில் கையை விட்டு, ஒவ்வொருவரிடமும் பணத்தைப் பெற்றுக் கொண்டு (எவ்வளவு தொகை? என்று தெரியவில்லை), ஒரு காகிதப் பொட்டலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தாள். நான் சந்தேகப்பட்டது சரியாகப் போய் விட்டது.

அந்த மாணவர்கள் அதை வாங்கி வைத்துக் கொண்டு, இன்னும் சற்றுத் தொலைவில் போய், புதராக செடிகள் மண்டியிருந்த இடத்தில், சுற்றி உட்கார்ந்தார்கள். ஒரு மாணவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்தான். பின், ஒவ்வொரு சிகரெட்டாக, அவர்களுக்கு விநியோகித்தான்.

சிறிது நேரத்தில், அவர்கள் அந்த சிகரெட்டில் உள்ள தூளை எடுத்து விட்டு, தாங்கள் வாங்கிய பேப்பர் பொட்டலத்திலிருந்து காய்ந்த சருகு போலிருந்ததை எடுத்து அதை அந்த சிகரெட்டிற்குள் திணித்து, பின் புகைக்கத் துவங்கினர்.

நிச்சயம் அது கஞ்சா தான் என்பது ஊர்ஜிதமானது. அடப்பாவிகளா, பார்க்க பச்சைப் பிள்ளையாட்டம் இருந்துகிட்டு, என்ன வேளை செய்றாங்க? என்றெண்ணியவுடன், எனக்கு வியர்க்கத் துவங்கியது. மேலே என்ன நடக்கிறது? என்ற பொருத்திருந்து பார்த்தேன்.


ஒரு பத்து நிமிடம் கழித்து, அவர்கள் கும்பலாக மறுபடி, பேருந்து நிறுத்தத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். தயாராக வைத்திருந்த பபிள்கம் பாக்கெட்டைப் பிரித்து, அதைச் சுவைக்கத் தொடங்கினார்கள். (வாசம் தெரியாமல் இருப்பதற்காக)

அவர்கள் முகத்தில், இனம் புரியாத மகிழ்ச்சி இருந்தது. கோணலாகச் சிரித்தார்கள். நான் சற்றுத் தள்ளியிருந்த ஒரு சிறிய டீக்கடையில், டீயை சாப்பிட்டுக் கொண்டே, அந்தக் கடைக்காரரிடம், லேசாக பிட்டைப் போட்டேன். உடனே அவர் என்னை மேலும் கீழுமாகப் பார்த்து விட்டு, ஏம்பா, பேசாம உங்க வேலையைப் பாத்துக்கிட்டு போங்கய்யா….என்று சற்று கடுப்பாகச் சொன்னார்.

இதில் அவருக்கும் உடந்தை என்பதை, என்னால் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. சற்று நேரத்தில், அவரை உறவில் அழைத்துப் பேச வந்தார்கள், இரண்டு லுங்கி கட்டிய வாலிபர்கள். அவர்கள் தோற்றமே, அவர்களை, அடியாட்கள் என்று சொல்லாமல் சொன்னது.

என் மனம் ஆறவில்லை. ஆதங்கம் தாளாமல், தெரிந்த நண்பர்களிடம், இது பற்றிக் கேட்ட போது, இதற்கென பெரிய நெட்வொர்க்கே இருப்பதாகச் சொன்னதும் அதிர்ச்சியாக இருந்தது. பிஞ்சிலே நஞ்சை விதைக்கும், இந்தக் கொடூரத்திற்கு என்ன முடிவு?

பெற்றவர்களை ஏமாற்றிப் பணத்தை வாங்கிக் கொண்டு இத்தகைய செயல்களைச் செய்யும், அந்த ரெண்டுக்கெட்டான் மாணவர்களை, எப்போது பெற்றோர்கள் இனம் கண்டு, என்ன முடிவெடுக்கப் போகிறார்கள்?

இந்த போதையிலிருந்து எப்படி அவர்களை மீடகப் போகிறார்கள்? என்ற கேள்வியே என்னுள் எழுந்து கொண்டேயிருந்தது. நாளை என்ன நடக்கப் போகிறதோ? ஏன்றெண்ணி, எனக்கு, அன்று இரவு முழுக்கத் தூக்கமில்லை!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!