ஜெவின் அறை தவிர சல்லி சல்லியாக சலித்த அதிகாரிகள்… ஜெவின் அறையை தவிர்த்ததுஏன்?


மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நள்ளிரவில் 5 மணிநேரம் சோதனை நடத்தி 2 பென்டிரைவ், லேப்டாப், கடித பண்டல்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சோதனையில் அதிகாரிகள் கடித பண்டல்களை எடுத்துச்சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.


சசிகலாவின் உறவினர்கள் மற்றும் பினாமிகளின் வீடுகள், அவர்களது அலுவலகங்கள் என கடந்த வாரம் வியாழக்கிழமை தொடங்கி 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.1012 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ. 1400 கோடிக்கு சொத்து ஆவணங்கள், 7 கோடி ரொக்கம், ரூ. 5 கோடிக்கு தங்கம் மற்றும் வைர நகைகள் மேலும் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகத்தில் தினசரியும் விசாரணை நடந்து வருகிறது.


இளவரசியின் மகன் விவேக், மகள்கள் கிருஷ்ணப்ரியா, ஷகிலா, ஜெயா டிவி மேனேஜர் நடராஜன் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். திவாகரன் மற்றும் சசிகலா பினாமிகளுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இளவரசியின் மகள் ஷகிலாவை நேற்று விசாரணைக்கு அழைத்த அதிகாரிகள், அவர் அளித்த தகவலின் அடிப்படையில் நேராக போயஸ்தோட்ட வீட்டிற்கு அழைத்து வந்தனர். சோதனை முதலில் பூங்குன்றனின் அறையில் நடப்பதாக மட்டுமே கூறப்பட்டது.


என்றாலும் போயஸ் தோட்ட வீட்டு முன்பாக அதிமுகவினர் குவிந்தனர். ரெய்டு நடப்பது பற்றி தகவல் அறிந்த உடன் ஜெயா டிவி சிஇஓ விவேக் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தார். அவரது வாகனத்தை யாரும் உள்ளே அனுப்பவில்லை.

இதனையடுத்து போயஸ்தோட்ட சாலையில் நடந்து வேதாநிலையம் வீட்டிற்கு சென்றார். யாருடைய வாகனத்தையும் அந்த வழியாக செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.


இதனிடையே அங்கே வந்த சசிகலா ஆதரவாளர்களை யாரையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அதேபோல சொத்துக்கு வாரிசு உரிமை கோரி வரும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவையும் வேதாநிலையம் வீட்டிற்கு அருகிலேயே விடவில்லை.

இதனால் கொந்தளித்து போனார் தீபா. இந்த சோதனை நள்ளிரவு தாண்டியும் நீடித்தது. 5 மணி நேரம் நடந்த சோதனைக்குப் பின்னர் ஜெயலலிதா வீட்டில் இருந்து அதிகாரிகள் பென் டிரைவ்கள், லேப்டாப், கடித பண்டல்களையும் எடுத்துச்சென்றனர்.


திடீர் சோதனை நடத்தியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. பூங்குன்றனிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய ஆவணங்கள் போயஸ் கார்டன் வீட்டில் உள்ள பூங்குன்றன் அறையில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்தே சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனை அதிமுகவினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


அதிமுகவினர் போயஸ்தோட்ட சாலையில் குவிந்தததால் சோதனையை முடித்து விட்டு பாதுகாப்புடன் அதிகாரிகள் கிளம்பி சென்றனர். சோதனைக்கு வந்த அதிகாரிகள் கடித பண்டல்களை எடுத்துச்சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!