கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணை பலாத்காரம் செய்த சென்னை தொழிலதிபர்!


சென்னையை சேர்ந்த தொழிலதிபரால் தாய்லாந்து பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மே மாதம் பிரதமர் அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் தன்னை சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் ஜெயின் மது போதையில் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து மோசடி செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி வந்துவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு மத்திய குற்றப்பிரிவு போலிசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. புகாரில் தெரிவிக்கப்பட்ட தொழிலதிபர்களான சூளையைச் சேர்ந்த மனோஜ் ஜெயின் மற்றும் போலியான பதிவு திருமணத்திற்கு உடந்தையாக இருந்த புரசைவாக்கத்தைச் சேர்ந்த விகாஸ் கோத்தாரி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவின் பெண்களுக்கெதிரான குற்ற விசாரணை பிரிவு போலிசார் நேரில் அழைத்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் சென்னை தொழிலதிபர் மனோஜ் ஜெயின் என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பேங்காக்கில் பப் ஒன்றில் தாய்லாந்து நாட்டு பெண்ணை சந்தித்ததாகவும், அப்போது அவர் குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்து கொடுத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து அவரது நண்பர்கள் சந்தோஷ் மற்றும் விகாஸ் கோத்தாரி முன்னிலையில் பேங்காக்கில் பதிவு திருமணம் செய்துகொண்டதாகவும், பதிவு திருமணத்தில் மனோஜ் ஜெயின் தனது நண்பர் சந்தோஷை கணவர் என கையெழுத்திடவைத்து ஏமாற்றியதும் தெரியவந்தது. இதனிடையே மனோஜ் ஜெயின் மூலம் அந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து மனோஜ் ஜெயின் மற்றும் விகாஸ் கோத்தாரியை கடந்த மே மாதம் 10 ஆம் தேதி கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைக்க ஜூன் மாதம் இருவரும் ஜாமினில் வெளிவந்து தலைமறைவாகி விட்டனர்.

இதையடுத்து மனோஜ் ஜெயின், தாய்லாந்து பெண் மற்றும் அவரது குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யுமாறு எழும்பூர் நீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டது. டிஎன்ஏ பரிசோதனைக்காக தாய்லாந்து பெண் அவரது குழந்தையுடன் சென்னை வரவழைக்கப்பட்டார்.

மனோஜ் ஜெயின் மற்றும் விகாஸ் கோத்தாரி ஆகியோர் தலைமறைவாகி விட்டதால், டிஎன்ஏ பரிசோதனை தற்போது செய்ய இயலாது என மத்திய குற்றப் பிரிவு போலிசார் தாய்லாந்து பெண்ணிடம் தெரிவித்து அலைகழித்ததாக கூறப்படுகின்றது. இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இந்த வழக்கிற்காக அடிக்கடி தாய்லாந்து நாட்டில் இருந்து தன்னை வரவழைக்கும் போலீசார் வழக்கில் அலட்சியம் காட்டுவதாக மீண்டும் பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பி உள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த தாய்லாந்து பெண் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்தியாவில் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்குமென நம்பி வந்ததாகவும், ஆனால் காவல்துறை துணையோடு குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டு தான் ஏமாற்றப்பட்டு, அலைக்கழிக்கப்படுவதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.

உள்ளூர் வழக்குகளைப் போலவே விசாரணை என்ற பெயரில் இழுத்தடிக்காமல் வெளி நாட்டுப்பெண்ணின் வழக்கையாவது விரைந்து முடிக்குமா காவல்துறை என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.-
Source: polimernews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!