ஆப்கானிஸ்தானில் சீக்கியர்களை குறிவைத்து கொடூர தாக்குதல் – மோடி கண்டனம்


ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் ஆஸ்பத்திரி திறப்பு விழாவிற்கு அந்நாட்டு அதிபர் அஸ்ரப் கனி நேற்று வந்திருந்தார். அவரை சந்தித்து பேச அங்கு சிறுபான்மையாக இருக்கும் சீக்கியர்கள் வந்திருந்தனர். திறப்பு விழா முடிந்ததும் அஸ்ரப் கனி சென்ற சில மணி நேரத்தில் சீக்கியர்களின் வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படையினர் வெடிகுண்டை வெடிக்கச்செய்து தாக்குதல் நடத்தினர்.

இந்த குண்டுவெடிப்பில் 11 சீக்கியர்கள் உள்பட 19 பேர் உடல் சிதறி இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.


“ஆப்கானிஸ்தானில் நேற்று நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஆப்கானிஸ்தானின் பன்முகத்தன்மை மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது” என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சோகமான தருணத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை இன்று வெளியுறவுத் துறை அலுவலகத்தில் சந்திக்க உள்ளதாகவும் சுஷ்மா டுவிட்டரில் கூறியுள்ளார்.source-maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!