சக அதிகாரியின் மனைவியை கொலை செய்த பின் கூகுளில் ஹண்டா என்ன தேடினார் தெரியுமா..?


சக அதிகாரியின் மனைவியை கொலை செய்த பின் கூகுளில் தடயங்களை மறைப்பது எப்படி? என ஹண்டா தேடியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தலைநகர் டெல்லி கண்டோன்ட்மென்ட் பகுதியில் முகத்தில் படுகாயங்களுடன் ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி சடலம் சில தினங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது. முதலில் விபத்தில் அந்தப் பெண் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

ஆனால், அவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டிருப்பதும், விபத்தில் இறந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக காரை முகத்தில் ஏற்றியிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் மற்றொரு ராணுவ அதிகாரி நிகில் ஹண்டா என்பவர் கடந்த 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை 4 நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மணிஷா திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், தான் செய்த கொலையை மறைப்பது எப்படி? என்று கூகுளில் ஹண்டா தேடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- “ போலீஸ் காவலில் எடுத்ததும் ஹண்டாவின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. இதில், செல்போன் இணையம் மூலமாக கூகுளில் கொலைக்கான தடயங்களை மறைப்பது எப்படி? என்று அதிகமாக தேடியுள்ளார். ஆன்லைனில், தனக்கு கிடைத்த தகவல்கள் மூலம் கொலைக்கான தடயங்களை மறைக்க முயற்சித்துள்ளார்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!