மயிரிழையில் உயிர் தப்பிய அமிதாப்பச்சன்… விதியா? சதியா? நடந்தது என்ன?


விழாவிற்கு சென்று திரும்பிய பிரபல நடிகர் அமிதாப்பச்சன் கார் விபத்தில் இருந்து உயிர் தப்பியிருக்கிறார். 23-வது சர்வதேச திரைப்பட விழா கடந்த வாரம் கொல்கத்தாவில் நடந்தது.

விழாவுக்கு மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். இதில் இந்தியா முழுவதும் இருந்து திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் இந்தி பட உலகின் மூத்த பிரபல நடிகர் அமிதாப்பச்சனும் கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்க கமல்ஹாசனும் சென்று இருந்தார். இந்த சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக நடந்தது.

விழா முடிந்த பிறகு அமிதாப்பச்சன் கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்ல தயாரானார். இதற்காக கடந்த சனிக்கிழமை காலை ஒரு காரில் கொல்கத்தா விமான நிலையம் புறப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் மும்பை செல்ல திட்டமிட்டு இருந்தார்.

அமிதாப்பச்சன் காரில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அந்த காரின் இடது பக்க சக்கரத்தில் ஒன்று கழன்று ஓடியது. உடனே, டிரைவர் சாமர்த்தியமாக காரை நிறுத்தினார்.


இதனால் அமிதாப்பச்சன் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினார். விபத்து குறித்து மேற்கு வங்க மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாநில மந்திரியின் கார் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் பாதுகாப்பாக கொல்கத்தா விமான நிலையம் சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் மும்பை திரும்பினார். அமிதாப்பச்சன் கார் விபத்தில் உயிர் தப்பிய சம்பவம் பற்றிய விவரம் இப்போது வெளியாகி இருக்கிறது.

இதை மேற்கு வங்க மாநில மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்து இருக்கிறார். அமிதாப்பச்சன் சென்ற கார் தனியார் டிராவல் ஏஜென்சிக்கு சொந்தமானது. அந்த நிறுவனத்துக்கு வாடகையாக பெரும் தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விபத்து பற்றி விளக்கம் கேட்டு அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கார் பயணம் செய்ய தகுதியானதா? காருக்கு உரிய சான்றிதழ்கள் இருந்தனவா? விபத்துக்கு காரணம் என்ன?

என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. டிராவல்ஸ் நிறுவனம் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!