பிக் பாஸுக்கு போயிட்டா பாட்டு வாத்தியாராக இருந்தாலும் பாத்திரம் கழுவி தான் ஆகணும் – நெட்டிசன்கள் கிண்டல்..!


தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து, அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடத்தப்பட்டு வருகிறது.

முதல் சீசனை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். முதல் சீசனில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மக்களின் ஆதரவையும் வாரி குவித்தார் ஓவியா. அதேபோல் பலரது முகத்திரைகளும் கிழிந்தன. பிக் பாஸில் கலந்துகொள்வதற்கு முன்னதாக சிலரது மீதான மக்களின் அபிப்ராயங்கள், அப்படியே தலைகீழாக மாறியது.

பிக் பாஸ் முதல் சீசனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால் இரண்டாவது சீசன் நடத்தப்படுகிறது. இதில், பொன்னம்பலம், அனந்த் வைத்தியநாதன், தாடி பாலாஜி, மும்தாஜ், டேனியல் போப், மகத், சென்ராயன், ஜனனி ஐயர் உள்ளிட்ட 16 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் நடந்த முதல் நாள் சம்பவங்கள் நேற்று ஒளிபரப்பப்பட்டன. வேட்பாளர் உறையை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் உண்மை முகம் வெளிவர ஆரம்பித்தது. மும்தாஜ்-சென்ராயன் மோதல், பொன்னம்பலத்திற்கு அனந்த் பாட்டு சொல்லி கொடுப்பது என முதல் நாளே பிக் பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.

தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்ய ஒரு போட்டி நடத்தப்பட்டது. வீட்டில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் உறையை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அந்த போட்டியின் போது, பெண்கள் அறையில் அவர்களின் கட்டிலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் உடை வைக்கும் அடுக்கை சென்ராயன் திறக்க, மும்தாஜ் எதிர்ப்பு தெரிவித்தார். மும்தாஜின் எதிர்ப்பு தொடர்பான அதிருப்தியை சென்ராயன் வெளிப்படுத்தினார்.

பின்னர் ஒருவழியாக ஒளித்து வைக்கப்பட்டிருந்த மூன்று உறைகளை மஹத், ஜனனி ஐயர் மற்றும் மும்தாஜ் ஆகிய மூவரும் கண்டறிந்தனர். மற்றவர்கள் வாக்களித்து அவர்கள் மூவரில் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுத்தனர். அதில், அதிக பேருடைய ஆதரவுடன் பிக் பாஸ் சீசன் 2ன் முதல் தலைவராக ஜனனி ஐயர் தேர்வு செய்யப்பட்டார்.

வீட்டின் தலைவர் ஜனனி ஐயர், சமையல் அணி, பாத்திரங்கள் கழுவும் அணி, சுத்தம் செய்யும் அணி ஆகியவற்றை தேர்வு செய்தார். சமையல் அணிக்கு மும்தாஜ் தலைமையிலும், கிளீனிங் அணிக்கு சென்ராயன் தலைமையிலும் உறுப்பினர்களை நியமித்தார்.

பாத்திரங்கள் கழுவும் அணிக்கு அனந்த் வைத்தியநாதன் தலைமையில் உறுப்பினர்களை நியமித்தார். பிக் பாஸ் சீசன் 2ல் கலந்துகொண்டுள்ளவர்களில் அனந்தும் பொன்னம்பலமும் தான் வயதில் மூத்தவர்கள். பொன்னம்பலம் கூட பெரும்பாலும் அனைவருடனும் ஐக்கியமாகிவிட்டார். ஆனால் அனந்த் வைத்தியநாதன் அனைவருடனும் மனம் திறந்து பேசவில்லை. அமைதியாகவே இருக்கிறார்.

பாட்டு வாத்தியாரான அவர், யாருக்காவது பாடல் சொல்லிக்கொடுப்பதில் தான் குறியாக இருக்கிறார். நீங்கள் பாட்டெல்லாம் ஒன்றும் சொல்லி கொடுக்க தேவையில்லை; பாத்திரத்தை கழுவுங்கள் என்பதுபோல, பாத்திரம் கழுவும் அணிக்கு தலைவராக்கப்பட்டுள்ளார். பிக் பாஸுக்கு போயிட்டா, பாட்டு வாத்தியாராக இருந்தாலும் பாத்திரம் கழுவி தான் ஆகணும் என கிண்டலடிக்கப்படுகிறார்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!