பிக் பாஸ் – 2 ரியாலிட்டி ஷோவில் இணைந்த இரு பிரபலங்கள்… யார் தெரியுமா..?


நடிகர் கமல் தொகுத்து வழங்கும் `பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் இரண்டாவது சீசன் வரும் 17-ம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.

15 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாள்கள் வசிக்க வேண்டும். அவர்களை கண்காணிக்க 60 கேமிராக்கள் அந்த வீடு முழுவதும் பொருத்தப்பட்டிருக்கும். வெளியுலகத் தொடர்பு ஏதுமின்றி 100 நாள்கள் அவர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் கழிக்க வேண்டும். இதற்கிடையில், பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளை முடிப்பது, தலைவரைத் தேர்ந்தெடுப்பது, வீட்டு வேலைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வது எனப் பல்வேறு கட்டங்களாக நிகழ்ச்சி கொண்டு செல்லப்படும்.

வீட்டுக்குள் இருப்பவர்களின் கருத்து மற்றும் மக்கள் வாக்களிப்பது என இரண்டு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களுள் ஒவ்வொருவராக வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இறுதியில் ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். கடந்தாண்டு கலவையான விமர்சனங்களுடன் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.


இந்தநிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இரண்டாவது சீசனில் பங்குபெறும் பிரபலங்கள் குறித்து ஆன்லைனிலும், ஆப்லைனிலும் விவாதங்கள் சூடுபறந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் – 2வில் பங்குபெறப்போகும் 15 பேரில் நடிகை ஜனனி ஐயர், தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான மமதி சாரி ஆகியோரின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனனி ஐயர்:
`அவன் இவன்’ படம் மூலம் இயக்குநர் பாலாவால் தமிழ்த் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர். தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துவரும் இவர், நடிப்பதற்கு முன் மாடலிங்கில் கவனம் செலுத்தி வந்தார். முதல் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னரே இவர் 100-க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் தலைகாட்டிவிட்டார். `பிக் பாஸ்’ சீசன் -2வின் இறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் பட்டியலில் இவரது பெயரும் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

மமதி சாரி:
தனித்துவமான உச்சரிப்பு, கொஞ்சும் குரல் என சின்னத்திரையை ஆட்சி செய்த மமதி சாரி, ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் தற்போது `வாணி ராணி’ தொடரில் நடித்து வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய `ஹலோ தமிழா’, `சமையல் சமையல்’, `செல்லமே செல்லம்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களிடம் பிரபலம். 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் அவர் சின்னத்திரை பணியிலிருந்து ஒதுங்கியிருந்தார். சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் இவரும் `பிக் பாஸ்’ போட்டியாளர்களில் ஒருவர் என்கிறார்கள்.-Source: vikatan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!