அந்நிய நாடுகளின் முன் வணிகத்தில், தலை நிமிர்ந்த தமிழன்…!


வரலாற்றில் பிரபலமானவர்களும், பிரபலமான சரித்திரச் சம்பவங்களும் நிறைந்த பகுதி என்ற வகையில் திருமங்கலம் என்ற ஊருக்குப் பல சிறப்பம்சங்கள் உள்ளன.. மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத்திற்காக இந்த ஊரில் தான் மாங்கல்யம் செய்யப் பட்டது. அதனால் திருமாங்கல்யபுரம் என அழைக்கப்பட்டு. பின்னாளில் திருமங்கலம் என்ற பெயரானது.

சங்க காலத்தில் வணிகப் பெருவழியில் அமைந்த நகரமாக இருந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.அதனை மெய்ப்பிக்கும் விதமாக இந்த ஊரில் ரோமானிய நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.


சில ஆண்டுகளுக்கு முன்பாக திருமங்கலத்தில் ஒரே இடத்தில் சுமார் 5 அடி உயரமுள்ள நான்கு முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. வரலாறுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே இங்கு நமது முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் அறியலாம்.

ஊரின் மேற்கே சுமார் 500 ஆண்டுகள் பழமையான மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் திருப்பணிகளும், புனரமைப்பும் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.


கோயிலுக்கு சற்று மேற்கே பழமையான மாரியம்மன் கோயிலும், குமரன் கோயிலும் உள்ளது. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் இங்கு நீதி மன்றம் உருவாக்கப்பட்டது. வரி கொடுக்க மறுத்த பாஞ்சாலக்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மன் மீது வழக்கு தொடரப்பட்டு இங்கு தான் விசாரணை நடைபெற்றது.

இன்றும் அந்தக் கட்டிடத்தின் பழமையான அமைப்பு ஏதும் மாறாமல் இருந்தவாறே பராமரிக்கப்பட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இன்றும் இந்தக் கட்டிடம் நீதி மன்றமாகவே செயல்பட்டுக் கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு. இந்த ஊரில் பிறந்து நாடகக்கலையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் தியாகி விஸ்வநாததாஸ்.


தேசப் பற்று மிகுந்த இவர் தனது நாடகங்களின் மூலம் மக்களிடையே சுதந்திரப் போராட்டத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்து சிலேடையாக தனது நாடகங்களில் வசனங்களைப் புகுத்தினார்.

அதனால் கோபமுற்ற ஆங்கிலேயர்கள் இவரது நாடகத்திற்குத் தடை விதித்தனர். அதனையும் மீறி நாடகத்தினை நடத்தியதால் பல முறை சிறை சென்றார். இவரைக் கௌரவிக்கும் நோக்கத்தில் இவர் வாழ்ந்த இடத்தில் மணிமண்டபம் ஒன்று கட்டப் பட்டுள்ளது.


இதன் மேல் தளத்தில் நூலகம் ஒன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வளாகம் முழுவதும் தியாகி விஸ்வநாத தாஸின் புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப் பட்டுள்ளன. தினகரசாமி என்ற சுதந்திரப் போராட்ட தியாகியும் திருமங்கலத்தைச் சேர்ந்தவர்.

இவர் முத்துராமலிங்கத் தேவருடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காமராஜரின் ஆட்சிக் காலத்தில் சிறந்த தொகுதி சட்ட மன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். மக்களால் பெரியவர் என அன்புடன் அழைக்கப்பட்டார்.


இவருடைய கால கட்டத்தில் இதே ஊரைச் சேர்ந்த வீரபத்திரன் என்ற சுதந்திர போராட்ட தியாகியும் காமராஜருடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றார். திருமங்கலம் ஆன்மீக இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட கம்பரன்பர் ராஜூ திருமங்கலத்தில் கட்டப்பட்ட கோயில்களுக்கும், அதன் திருப்பணிகளுக்கும் மூல காரணமாக இருந்தவர்.

இப்படி கட்டபொம்மன் காலத்திலிருந்து தொடர்ந்து ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட பல தலைவர்கள் மற்றும் ஆன்மீகச் சின்னங்களின் ஒருங்கிணைந்த உறைவிடமாக திருமங்கலம் திகழ்ந்துள்ளது. இது இந்த நகரத்திற்கு கிடைத்த பொருத்தமான அங்கீகாரம்!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!