தந்தையின் நெஞ்சிலேயே சுட்ட போலீஸ்கார மகன்; குடிப்பழக்கத்தை விட சொன்னதால் ஆத்திரம்..!


குடிப்பழக்கத்தை விட சொன்ன தந்தையை நெஞ்சிலேயே துப்பாக்கியால் “டொப்” என்று சுட்ட போலீஸ்கார மகனை காவலாளர்கள் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (68). இவர் அங்குள்ள துணிக் கடையில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி குருநாகேஸ்வரி. இவர்களுக்கு விக்னேஷ்பிரபு (32), ராம்குமார் (30) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

விக்னேஷ்பிரபு தேனி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். ராம்குமார் தனது தந்தை வேலை பார்க்கும், அதே துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

விக்னேஷ்பிரபுவுக்கு திருமணமாகி காயத்ரி என்ற மனைவியும், பிரிநித்திகா (5) என்ற மகளும், புவனேஷ் (2) என்ற மகனும் உள்ளனர்.

விக்னேஷ்பிரபு தினமும் குடித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு காயத்ரி குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனால் விக்னேஷ்பிரபு தேனி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். வடுகப்பட்டிக்கு அவ்வப்போது வந்து சென்றார்.

நேற்று மதியம் வடுகப்பட்டிக்கு வந்த விக்னேஷ்பிரபு குடித்துவிட்டு வந்துள்ளார். இதனை அறிந்த தந்தை செல்வராஜ் மகனை குடிப்பழக்கத்தை விட சொல்லி கண்டித்துள்ளார். இதனால் விக்னேஷ்பிரபுவுக்கும், தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த விக்னேஷ்பிரபு தான் வைத்திருந்த தானியங்கி துப்பாக்கியை (எஸ்.எல்.ஆர்) எடுத்து செல்வராஜை “டொப்” என்று சுட்டார்.

இதில் குண்டுகள் அவர் நெஞ்சில் பாய்ந்து அந்த இடத்திலேயே செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இதனை நேரில் பார்த்த தாயார் குருநாகேஸ்வரி அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

விக்னேஷ்பிரபு தனது தந்தையை சுட்டுக் கொன்றுவிட்டதாக செல்போன் மூலம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தெரிவித்தார். தென்கரை காவலாளர்கள் விரைந்து வந்து விக்னேஷ்பிரபுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு தானியங்கி துப்பாக்கிகளையும், ஒரு கைத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் இருந்து கூடலூருக்கு சென்ற உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் தலைமையிலான குழுவில் விக்னேஷ்பிரபுவும் இருந்தார்.

நேற்று காலை பாதுகாப்பு பணிக்கு செல்வதற்காக தேனி ஆயுதப்படையில் இருந்து உதவி ஆய்வாளரின் கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தானியங்கி துப்பாக்கிகளை விக்னேஷ்பிரபு பெற்றுள்ளார்.-Source: tamil.asianetnews

அந்தத் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பணிக்கு செல்லாமல் குடித்துவிட்டு வடுகப்பட்டிக்கு சென்றுள்ளதும் காவலர் விசாரணையில் தெரியவந்தது.