தூத்துக்குடிக்கு சத்தமில்லாமல் வந்த தளபதி..! பலியானோர் வீட்டுக்கு போய் துக்கம் விசாரித்தார்..!


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல் சொன்னதோடு நிதி உதவியும் வழங்கினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்களுக்கு மேல் அறவழியில் போராட்டம் நடத்திய பொது மக்கள் கடந்த மாதம் 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அப்பாவிப் பொது மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதைத் தொடர்ந்து, கமல்ஹாசன், முக ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்டோர், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினர். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியும் அளித்தனர்.


இந்நிலையில், நடிகர் விஜய், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் பாதிக்கப்பட்டவர்களின் இல்லங்களுக்கு சென்று, அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் வாயில் சுடப்பட்டு மரணமடைந்த மாணவி ஸ்னோலின் வீட்டுக்குச் விஜய் சென்றபோது, அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். அருமை மகளை இழந்துவிட்டோமே என அவர்களுக்கு நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.

நடிகர் விஜயின் இந்தச் திடீர் சந்திப்பு தூத்துக்குடி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.. இன்று, நடிகர் விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை நேரில் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!