வாட்ஸ்அப் புகைப்படத்தால் நடந்த பயங்கரம் – இளைஞர் அடித்துக்கொலை..!


அரியானா மாநிலம் சோனிபட் நகரைச் சேர்ந்த லவ் ஜோகர் (வயது 28) என்பவர் வாட்ஸ்அப் குரூப்பின் அட்மினாக செயல்பட்டு வருகிறார். அப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் இந்த குரூப்பில் இணைந்து, தங்கள் சமுதாயம் சார்ந்த தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர். இந்த தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு எடுப்பதற்காக இந்த குரூப் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வாட்ஸ்அப் குரூப்பில் தனது தனிப்பட்ட புகைப்படத்தை லவ் ஜோகர் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக லவ் ஜோகருக்கும் தினேஷ் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று தினேஷ் கூற, அவரது வீட்டிற்கு லவ் ஜோகர் சென்றுள்ளார். அவருடன் அவரது சகோதரர்களும் சென்றுள்ளனர்.

தினேஷ் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் லவ் ஜோகர் மற்றும் அவரது சகோதரர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த லவ் ஜோகர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். சகோதரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். தங்கள் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார்? என்பதில் ஏற்பட்ட போட்டியே சண்டை ஏற்பட காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!