பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியதால் 25 பேர் பலி…!


கவுதமாலா நாட்டில் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீட்டர்கள் தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. பியூகோ என்றால் ஆங்கிலத்தில் தீ என பொருள்படும். இதனருகே சுற்றுலாவாசிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியான ஆன்டிகுவா நகரமும் அமைந்துள்ளது. இங்கு காபி தோட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன.

இந்த நிலையில், பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. அதில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவிற்கு செந்நிற, வெப்பம் மிகுந்த லாவா வெளியேறி வருகிறது. இதனால் ஏற்பட்ட கரும்புகை மற்றும் சாம்பல், தலைநகர் மற்றும் பிற பகுதிகளுக்கு பரவியுள்ளன.

இதில் 25 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர். எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 3,100 பேர் வெளியேறினர்.

இந்த எரிமலை வெடிப்பினால் லா ஆரோரா சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டு உள்ளது. இதேபோன்று கோல்ப் விளையாட்டுக்காக அமைந்த கோல்ப் கிளப்பும் மூடப்பட்டது. அங்கிருந்த பணியாளர்கள் மற்றும் விருந்தினர்கள் வெளியேறினர்.

இந்த எரிமலையில் இருந்து வெளிவரும் லாவாவின் வெப்பம் 700 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்படுகிறது. எரிமலை சாம்பல் 15 கி.மீட்டர் வரை பரவ கூடும். காற்றில் ஏற்பட்ட மாற்றத்தினால் எரிமலை சாம்பல் தலைநகரின் பல பகுதிகளிலும் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!