சோதனைக்குழாய் மூலம் பிறந்தவர் சீதை, நாரதர் கூகுள் போன்றவர் – உ.பி துணை முதல்வர் சர்ச்சை பேச்சு..!


சீதையே சோதனைக்குழாய் மூலம் பிறந்த முதல் குழந்தை என்றும், நாரதர் கூகுள் போன்றவர் என்றும் உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த விழா ஒன்றில் பேசிய துணை முதல்வர் தினேஷ் சர்மா, சோதனைக்குழாய் மூலம் பிறந்த முதல் குழந்தை சீதா தான் என சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது,

”சோதனைக்குழாய் மூலம் குழந்தை பிறப்பது ராமாயண காலத்திலேயே இருந்துள்ளது. ராமாயண இதிகாசத்தில் ராமரின் மனைவி சீதை மண்பானையில் பிறந்ததாக கூறப்படுகிறது. எனவே சீதையே சோதனைக்குழாய் மூலம் பிறந்த முதல் குழந்தை. அதே போல் நாரதர் அனைத்து தகவல்களையும் அறிந்தவர் மேலும் ஒரு செய்தியை அனைத்து இடங்களிலும் பரப்பியவர் என்பதால், நாரதர் கூகுள் போன்றவர். மேலும் மகாபாரத காலத்தில் போர் காட்சிகளை திருதராஷ்டிரருக்கு சஞ்சயன் விளக்கி கூறுவது அக்காலத்திலேயே நேரலை தொடங்கி விட்டதை குறிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

இதனிடையே உத்தரபிரதேச துணை முதல்வரின் பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!