அப்போலோவில் ஒரு வாரம் கழித்து ஜெ. வை சேர்த்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன் – கருணாஸ்..!


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நடத்தும் மாதிரி சட்டசபை கூட்டம் நடந்தது. இதில் திமுக, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் எம் எல் ஏ.க்கள் கலந்துகொண்டுள்ளனர். அதிமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற கருணாஸும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். திமுக சட்டசபைக் கொறடா சக்ராபாணி இந்த மாதிரி சட்டசபைக்கான சபாநாயகராக பொறுப்பேற்றிருக்கிறார்.

கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மாதிரி சட்டசபையில் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார் ஸ்டாலின்.

அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று இருந்த முக்குலத்தோர் புலிப்படை கருணாஸ் எம்.எல்.ஏ. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழக முதல்வராக இருக்கும் ஒருவர் துப்பாக்கிச் சூட்டையே தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறுவது எவ்வளவு பெரிய கேவலம் என்று விமர்சித்தார். தமிழக அரசினை விரைவில் கலைத்துவிட்டு ஸ்டாலின் தலைமையில் புதிய அரசை உருவாக்க வேண்டும். நேற்று தமிழக அரசு சார்பில் கூட்டப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன்தான் நான். ஆனால் மக்கள் பிரச்சினைகளை பேசுவதற்கு நேற்று எனக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். ஜெயலலிதா ஒரு வாரம் கழித்து அப்போலோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன் என்று கூறினார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!