ஜெமினி கணேஷன் – சாவித்திரியின் உண்மையான காதல் கதை இதுதான்…!


நாக் அஸ்வின் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா போன்றவர்கள் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை பெற்றிருக்கும் படம் நடிகையர் திலகம்.

நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் பயோபிக் இந்த படம். இன்றும் நாம் எங்கு தேடினாலும் சாவித்திரியின் கடைசி நாட்களின் புகைப்படங்கள் பெரிதாக கிடைக்காது.

இருபது ஆண்டு காலம் தென்னிந்திய சினிமாவின் மகாராணியாக வலம் வந்த நடிகை. மது பழக்கத்திற்கு ஆழாகி, கோமாவில் வீழ்ந்து மரணம் அடைந்தது திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சிலர் சாவித்திரியை ஜெமினி கணேஷன் கடைசி நாட்களில் கைவிட்டுவிட்டார் என்றும் கூறுகிறார்கள். இன்று சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகை காதலித்து திருமணம் செய்துக் கொள்வது சாதாரணமாக இருக்கிறது.

ஆனால், அன்றைய காலக்கட்டத்திலேயே காதலித்து இரகசியமாக திருமணம் செய்துக் கொண்டவர்கள் காதல் மன்னனும் – நடிகையர் திலகமும். இவர்கள் இருவருக்குமான அறிமுகம்… சாவித்திரி நடிகையர் திலகமாக உருவாகும் முன்னரே உதயமாகியிருந்தது.

ராமசாமி கணேஷன்!
அப்போது அவர் வெறும் ராமசாமி கணேஷன் தான். 1940களில் ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தில் அவர் அசோசியேட்டாக பணிபுரிந்து வந்தார். உண்மையில் காதல் மன்னனுக்கு ஜெமினி என்ற பெயர் முன்னாடி ஒட்டிக் கொண்டதன் காரணம், அவர் பணிபுரிந்த இந்த நிறுவனத்தால் தான். பிற்காலத்தில் ராமசாமி கணேஷன் நடிகர் அவதாரம் பூசிக் கொண்ட பிறகு ஜெமினி கணேசனாக மாறினார். ராமாசாமி கணேஷன் பல திறமையானவர்களை டெஸ்ட் வைத்து தேர்வு செய்துள்ளார். அப்படியாக தான் நடிகையர் திலகத்தையும் அவர் ஒருநாள் டெஸ்ட் வைத்து பார்த்தார்.

ஆந்திர பெண்!
ஆந்திராவில் இருந்து சாவித்திரி என்ற பெண் அன்று ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். அந்த பெண்ணின் முகம், புன்னகை பார்த்த உடனேயே ராமசாமி கணேஷன் இந்த பெண் நிச்சயம் பெரிய நடிகையாக வருவார் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார். இந்த பெண் நல்ல திறமை கொண்டுள்ளார், இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் பெரிய ஆளாக வருவார் என்று கூறுகிறார் ராமசாமி கணேசன். ஆனால், அன்று ரீல் ஸ்க்ரீன், ரியல் ஸ்க்ரீன் என இரண்டிலுமே இவர்கள் ஜோடி சேர்வார்கள் என ராமசாமி கணேசனுக்கும் தெரியாது. சாவித்திரிக்கும் தெரியாது.

கல்யாணம் பண்ணி பார்
ஆரம்பத்தில் ஒரு வாய்ப்பு சம்சாரம் என்ற படத்தில் முதன்மை நடிகையாக வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சாவித்திரி சரியாக நடிக்காமல் போனதால் மிக சிறிய வேடம் மட்டும் ஏற்கும் நிலைக்கு ஆளானார். பிறகு பாதாள பைரவி படத்தில் ஒரு பாட்டில் நடனமாடி இருந்தார். ஓரிரு படங்களுக்கு பிறகே, பெல்லி சேசி சூடு (தமிழில் கல்யாணம் பண்ணி பார் என வெளியானது) என்ற படத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முதன்மை நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றார் சாவித்திரி.

ராமசாமி – ஜெமினி!
ஒருபுறம் சாவித்திரி நடிகையாக உயர. மறுபுறம் ராமசாமி கணேஷன் தாய் உள்ளம் என்ற படத்தில் எதிரி வேடம் ஏற்றிருந்தார். பிறகு சாவித்திரி – ஜெமினி கணேஷன் இருவரும் நடிகர், நடிகையாக மனம் போல் மாங்கல்யம் என்ற படத்தில் நடித்தனர். அந்த படம் வெற்றிப் படமாக மட்டும் அமையாமல், இவர்கள் இருவரும் ஒரு சிறந்த ஜோடி என்ற பெயரையும் பெற்று தந்தது. இந்த படத்தில் இருந்து தான் ராமசாமி கணேஷன், ஜெமனி கணேசனாக உருமாறினார்.

காதல்!
யாருக்கும் தெரியாமல் சாவித்திரி மற்றும் ஜெமினி மத்தியில் காதல் மலர்ந்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் மறுத்து வந்தாலும். ஒரு கட்டத்தில் கிசுகிசு மிகவும் அதிகரிக்க துவங்கியது. ஒரு கட்டத்தில் இருவராலும் மறைக்க முடியாமல் தாங்கள் இருவரும் எப்போதோ ரகசிய திருமணம் செய்துக் கொண்டதை ஒப்புக் கொண்டனர். ஜெமினி கணேஷன் ஏற்கனவே திருமணமானவர். அவரது முதல் மனைவி பெயர் அலமேலு. முதல் மனைவி மூலமாக ஜெமினி கணேசனுக்கு நான்கு குழந்தைகள். மேலும், இரண்டாவது மனைவி புஷ்பவல்லி என்பவர் மூலம் பானு ரேகா (ரேகா, திரைப்பட நடிகை) மகளாக பெற்றிருந்தார்.

பின்னடைவு!
இந்த காலக்கட்டத்தில் தான் ஜெமினி கணேஷன் காதல் மன்னன் என்ற பெயர் பெறுகிறார். ஒருமுறை விளம்பர படத்தில் கையொப்பம் இடும்போது சாவித்திரி கணேஷன் என்று கையெழுத்திட இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்ட சமாச்சாரம் பொதுவெளியில் தெரியவந்தது. ஜெமினியை திருமணம் செய்து கொண்டது சாவித்திரிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என பலர் கூறியுள்ளனர். மேலும், மூன்றாவது மனைவியாக சாவித்திரி ஜெமினியை திருமணம் செய்துக் கொண்டதை பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சூப்பர் ஜோடி!
மிசியாம்மா, பாசமலர், கப்பலோட்டிய தமிழன், களத்தூர் கண்ணம்மா என இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் படங்கள். தனிப்பட்ட வாழ்க்கை என்று மட்டுமின்றி, திரை வாழ்விலும் இவர்கள் இருவரும் கொடிகட்டி பறந்தனர். அப்போது தான் சாவித்திரிக்கு நடிகையர் திலகம் என பெயர் சூட்டப்பட்டது.இந்த ஜோடிக்கு ஒரு மகன், ஒரு மகள்.

தாராள உள்ளம்!
சாவித்திரியிடம் இரண்டாவது எண்ணம் என்ற ஒன்று இல்லவே இல்லை. முதல் முறை என்ன நினைக்கிறாரோ அதை தான் செய்வார். மிக வேகமாக கார் ஓட்டும் பழக்கம் கொண்டிருந்த சாவித்திரியிடம் தாராள மனதும் இருந்தது. அவர் வீட்டு கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். உதவி என்று கேட்டு வருவோருக்கு இல்லை என்று சொல்லாமல் உதவும் மனப்பான்மை கொண்டிருந்தார். இதனால், ஒரு கட்டத்தில் சாவித்திரி பொருளாதார நெருக்கடியில் சிக்கினார். பின்னாட்களில் இவர் நடித்த மற்றும் தயாரித்த படங்கள் தோல்வி அடைந்தன. அதே காலக்கட்டத்தில் ஜெமினி கணேஷன் மற்றும் சாவித்திரி இடையேயான உறவிலும் மனக்கசப்பு உண்டானது.

குடி பழக்கம்!
அப்போது தான் சாவித்திரிக்கு குடி பழக்கம் ஏற்பட்டது. அவரால் பிரச்சனைகளை கையாள முடியாமல் போனது. அந்த சூழல்களை தெளிவாக கையாள முடியாமல் போக பெரிதும் பாதிக்கப்பட்டார். மேலும், சாவித்திரிக்கு அறிவுரை கூறவும் அப்போது அருகில் யாரும் இல்லை. இதனால் இவரது குடி பழக்கம் அதிகமானது. இதனால் சாவித்திரி கோமா செல்லும் நிலை உண்டானது.

கோமா!
ஏறத்தாழ 19 மாதங்கள் சாவித்திரி கோமாவில் இருந்தார். அம்மா மீண்டும் எழுந்து வந்துவிடுவார் என்றே காத்திருந்தோம். ஆனால், அவர் வாழ்க்கை கோமாவில் இருந்து மரணத்தில் முடிவடைந்து விட்டது. மருத்துவமனை படுக்கையில் அவரை காணும் போது மனம் ரணமாக இருந்தது. என்று சோகமாக கூறியுள்ளார் சாவித்திரியின் மகள் விஜயா சாமுண்டேஸ்வரி. சாவித்திரியை கடைசி நாட்களில் ஜெமினி கணேஷன் கைவிட்டுவிட்டார் என சிலர் கூறுகிறார்கள்.

இருவரும் இறந்த பிறகு அதுக் குறித்து பேசுதல் சரியல்ல. இருவருமே தங்கள் துறையில் தங்கள் பணியை செம்மையாக செய்தவர்கள். ஆயினும், நடிகையர் திலகம் என பெயர் பெற்று இரண்டு தசாப்தங்கள் தென்னிந்தியா திரையுலகை தனது கைக்குள் வைத்திருந்த ஒருவர் குடி பழக்கத்திற்கு ஆளாகி கோமா சென்று இறந்தது ரசிகர்களை பேரதிர்ச்சியாக அமைந்தது.

நடிகையர் திலகம் சாவித்திரியை பெருமைப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ளது மகாநதி என்கிற நடிகையர் திலகம் எனும் திரைப்படம்.-Source: tamil.boldsky

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!